அடாவடி பிக்குவின் அட்டகாசங்கள் – பட்டியலிட்டது கூட்டமைப்பு

0

மட்டக்களப்பு மங்களராம விகாரையின் புத்தபிக்கு அம்பிட்டிய சுமணரட்ண தேர்ருக்கு எதிராக சட்டநடவடிக்கை உடனே எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று மாலை மட்டக்களப்பில் ஒன்று கூடிய மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள், இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் இன்று (24) ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கை வருமாறு-

மட்டக்களப்பு மங்களராம விகாரையில் பௌத்த மதகுருவாக நீண்டகாலமாக செயல்பட்டு வரும் அம்பிட்டிய சுமணரட்ண தேரர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அத்துமீறிய காணி அபகரிப்புக்களையும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களையும் மேற்கொண்டு வருவதும் தமிழ் மக்களை துன்புறுத்தும் விதமாக கருத்துக்களை தெரிவித்து வருவதும் அரச அதிகாரிகளை தாக்கிவருவதும் தொடர்சியாக இடம்பெற்று வருவதை தமிழ்தேசிய கூட்டமைப்பினராகிய நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

இவரால் மேற்கொள்ளப்பட்ட அடாவடித்தனங்கள் சில

1) 2008, இருதயபுரம் கிராமசேவகரை தாக்கியமை.

2) 2013.07.13 மட்டக்களப்பில் தேசிய சமாதானப் பேரவையினால் நடத்தப்பட்ட கருத்தரங்கு இவரால் குழப்பபட்டு இடைநிறுத்தப்பட்டது

3) 2013, நவம்பர் மாதம் பட்டிப்பளை பிரதேச்செயலாளரை எச்சரித்தமை, கெவிளியாமடு கிராமசேவை உத்தியோகத்தரை தாக்கியமை.

4)2016 பொலிஸ்நிலையம் முன்பாக உள்ள கட்டடத்தின் நினைவு பெயர் கல்லை உடைத்தமை,

5)2018 செங்கலடி பிரதேச செயலாளரை துன்புறுத்தியமை

6)2019, டிசம்பர் மாதம் கத்தோலிக்க மத குருவை தாக்கியமை.

7)2020/09/21, தற்போது மட்டக்களப்பு பதுளை வீதியில் பன்குடாவெளியில் உள்ள தனியார் காணி ஒன்றில் அத்துமீறி பிரவேசித்து அதை பார்வையிட சென்ற அரச அலுவலர்களை தாக்கி துன்புறுத்தியமை

இவ்வாறு பலவருடங்களாக மட்டக்களப்பில் அம்பிட்டிய சுமணரட்ண தேரர் தொடர்ச்சியாக பொதுமக்களையும் அரச அலுவலர்களையும் தாக்கியுள்ளார்.
இவரின் அத்துமீறிய அடாவடித்தனங்கள் வன்முறைகள் அனைத்தும் பொலிசார் நேரடியாக பார்த்துக் கொண்டு இருக்கும் நிலையில் அவர்களின் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.

இதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளது. பல சம்பவங்கள் தொடர்பாக நீதிமன்றில் வழக்குகளும் இடம்பெற்றன.

இருந்தபோதும் இவர் சட்டங்களை மதிக்காமல் வன்முறையில் தொடர்ச்சியாக ஈடுபட்ட்டு வருவதை அவதானிக்க முடிகிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

எனவே இந்த வன்முறைகளில் நேரடியாக ஈடுபடும் அம்பிட்டிய சுமணரட்ண தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் இவ்வாறான வன்முறைகளையும் காணி அபகரிப்புகளை மேற்கொள்வதையும் உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை வேண்டுகின்றோம்.

இவரின் செயல்பாடுகள் இன நல்லுறவுக்கு பெரும் கேடாக உள்ளது என்பதை அறிந்து உடனடியாக இவரை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு தமிழ்தேசியஎகூட்டமைப்பினராகிய நாம் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

தமிழ்தேசியகூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டம்.
1.பொ.செல்வராசா (மு.பா.உ,சிரேஷட தலைவர் இலங்கைதமிரசுகட்சி)
2).இ.பிரசன்னா (மு.மா.உ, உபதலைவர் தமிழீழவிடுதலை இயக்கம்)
3).பொ செல்லத்துரை (மாவட்ட தலைவர் தமிழ்மக்கள் விடுதலை கழகம்)
4).பா.அரியநேத்திரன்(மு.பா.உ, பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசுகட்சி தலைவர்)
5)சீ.யோகேஸ்வரன்(மு.பா.உ)
6)ஞா.சிறிநேசன்(மு.பா.உ)
7)தி.சரவணபவான்(மாநகரமுதல்வர்)