அடிப்படைவாத வகுப்புக்களை நடாத்திய இருவர் கைது

0

கல்விப் பொதுத் தராதர பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு அடிப்படைவாத வகுப்புக்களை நடாத்திய இரண்டு நபர்கள் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஒலுவில் பிரதேசத்தில் வைத்து நேற்றைய தினம் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. 

30 மற்றும் 39 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். 

வௌிநாட்டு தீவிரவாத குழுக்களுக்கு உறுப்பினர்களை இணைத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் சொற்பொழிவுகள் அடங்கிய விடயங்கள் சந்தேகநபர்களால் இந்நாட்டு சிறுவர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த 2018 ஆம் ஆண்டு ஓலுவில் பிரதேசத்தில் இந்த வகுப்புக்கள் இடம்பெற்றுள்ள நிலையில், அதில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு அவர்களின் அனுமதி இன்றி பல்வேறு உடற்பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். 

குறித்த பயிற்சிகளை விரும்பாத மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டு சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்படவுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 

தடுப்பு காவல் உத்தரவின் பேரில் அவர்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான குண்டுதாரியான சஹ்ரான் ஹசீமின் ஒத்துழைப்புடன் குறித்த வகுப்புக்கள் நடாத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.