அடுத்து வரும் ஒரு மாதத்திற்கு இலங்கையை முற்றாக மூட வேண்டும் – துஷார ஹிந்துனில்

0

நாட்டின் பாரத்தூரத்தன்மையை உணர்ந்துக் கொண்டு, அடுத்து வரும் ஒரு மாதத்திற்கு இலங்கையை முற்றாக மூட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார ஹிந்துனில் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இன்று அதிகளவான கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கட்டுநாயக்க இராணுவ முகாமும் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் முப்படையினர், பொலிஸார், வைத்தியர்கள், துப்புரவு பணியாளர்கள் என அனைவருக்கும் இன்று கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இவர்கள்தான் கொரோனாவுக்கு எதிராக போராடி மக்களை காப்பாற்றுகிறவர்கள்.

இவர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளமை மிகவும் மோசமான விடயமாகும். இதற்கு அரசாங்கம்தான் பொறுப்புக் கூற வேண்டும். அவர்களுக்கான உரிய பாதுகாப்பு கருவிகள், முகக்கவசங்கள் என எதுவும் இல்லாமல் பரிசோதனை மேற்கொண்டமையே இதற்கான காரணமாகும்.

துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு கொரோனாவுடன் போராட முடியாது. இதற்கு சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவைப்படுகின்றது. விடுதலைப் புலிகளுடன் சண்டையிட்டதைப் போன்று, வைரஸுடன் சண்டையிட முடியாது.

கடற்படையினர் உள்ளிட்ட முப்படையினருக்கு இந்த தொற்று பரவியமைக்கான பொறுப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷதான் ஏற்றுக் கொள்ள வேண்டும். நாம் இன்று பாரிய சவாலுக்கு முகம் கொடுத்து வருகிறோம். பாதுகாப்புத் துறையும், வைத்தியத் துறையும் இவ்வேளையில் பலமாக இருக்க வேண்டும்.

இந்த இரண்டு துறையும் பலவீனமடைந்த காரணத்தினால்தான் அமெரிக்காவின் நிலைமை தீவிரமடைந்தது. இதனை அரசாங்கம் உணர்ந்துக் கொள்ள வேண்டும். நாம் இவ்வேளையில் ஒன்றிணைய வேண்டும்.

நாம் கிராமங்களுக்குச் சென்று மக்களுக்கு பொருட்களை வழங்கத் தயாராக இருக்கிறோம். இதனால், நாட்டை ஒரு மாதத்திற்கு முழுமையாக மூடுவோம் என்று கேட்டுக் கொள்கிறேன்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.