அடுத்த இரண்டு வாரங்களில் மிகக் கடுமையான சுகாதார நடவடிக்கை – Dr அனில் ஜாசிங்க

0

எரிமைலை ஒன்றின் மீது பயணிப்பது போன்றே இப்போதைய சூழ்நிலை அமைந்துள்ளது எனவும் எப்போது வெடித்து சிதறும் என எவரும் எதிர்பார்க்க முடியாத நிலைமையே உள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்தாலும் கூட கொரோனா தொற்று குறித்த அச்சுறுத்தல் தொடர்ந்தும் நிலவுவதாகவும் அடுத்த இரண்டு வாரங்களில் மிகக் கடுமையான சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளாகவும்  சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று நிலைமைகள் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “கடந்த இரண்டு வாரங்களுக்கு அதிகமான காலமாக நாம் மிகவும் கவனமாக கொரோனா தொற்றுப்பரவல் குறித்து அவதானம் செலுத்தி வருகின்றோம்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் வரையில் இலங்கையில் அதிகளவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்பட்ட போதிலும் கடந்த இரண்டு, மூன்று தினங்களாக தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. இதனால் கொரோனா வைரஸ் நோய் பரவல் குறைந்துள்ளதாகவோ அல்லது முற்றாக தடுக்கப்பட்டுள்ளதாகவோ ஒருபோதும் கருத முடியாது.

இப்போது எவரும் அடையாளம் காணப்படாத போதிலும் கூட எரிமைலை ஒன்றின் மீது பயணிப்பது போன்றே இப்போதைய சூழ்நிலை அமைந்துள்ளது. எப்போது வெடித்து சிதறும் என எவரும் எதிர்பார்க்க முடியாத நிலைமையே உள்ளது.

எனவே மக்கள் மிகவும் அவதானமாக தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கைகளைக் கையாள வேண்டும். சுகாதாரத்துறை வழங்கும் ஆலோசனைகளை முழுமையாகப் பின்பற்றி செயற்பட வேண்டும். ஒரு சிலர் தூரநோக்கு சிந்தனையின்றி செயற்படுவது ஒட்டுமொத்த நாட்டினையும் பாதிக்கும். ஒவ்வொரு நபரும் தமது பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும்.

உலக நாடுகளில் இன்று இரண்டாம் கட்டமாக மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. அவ்வாறு இருக்கையில் இலங்கையிலும் நாம் முன்கூட்டிய வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் எமக்கு உள்ளது.

ஆகவே சுகாதாரத் துறையினர் அடுத்த இரண்டு வாரங்களில் மிகவும் கடினமான வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அரசாங்கம் எமக்கான முழுமையான அதிகாரங்களை வழங்கியுள்ளது” என அவர் கூறினார்.