அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை!

0

அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வைத்திய பரிசோதனை சபையின் பணிப்பாளர் வைத்தியர் ஜெயருவான் பண்டார இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஆரம்பத்தில் ஒருவர் இருவர் என்ற வகையில் நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்.

முதலில் இது ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு பரவும் விதமாகவே கண்டறியப்பட்டது. தனி நபர்களை கண்டறிந்து நிலைமைகளை கட்டுப்படுத்த எமக்கு இலகுவாக இருந்தது.

கொழும்பு, புத்தளம் ஆகிய பகுதிகளில் அவர்கள் வசித்ததாக கூறப்பட்ட நிலையில் ஒரு சில நாட்களின் பின்னர் அப்பகுதிகளில் கொரோனா தொற்றளார்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது.

அதேபோல் இப்போது நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் ஒருவர் இருவர் என்ற அடிப்படையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். இந்த எண்ணிக்கை வெகு விரைவாக அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.

உலக நாடுகளில் ஆரம்பத்தில் அதாவது கொரோனா தொற்றாளர்கள் குறித்து முதல் வாரங்களில் மிகவும் மெதுவான உயர்வுநிலை காணப்பட்ட போதிலும் பின்னர் மிக வேகமாக அந்த நாடுகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரண வீதவும் அதிகரித்தது.

உலக சுகாதார மையத்தின் கொரோனா வரைபட நிரலை பார்கையில் இன்று மிகவும் உயரிய தாக்கத்தை அது காட்டுகின்றது. அதேபோன்று இலங்கையிலும் அவ்வாறான அச்சுறுத்தல் உள்ளது.

முதல் சில வாரங்களில் மிகவும் மெதுவாக கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டாலும் கூட அடுத்த ஒரு இரு வாரங்களில் மிக வேகமாக பரவக்கூடிய நிலைமை இருப்பதாக நாம் கருதுகின்றோம்.

 இது சாதாரண விடயமாக கருத முடியாது. இது நாட்டிற்கு மிகவும் அச்சுறுத்தலான விடயமாகும். இதற்கான காரணம் எமது சமூகத்தில் கலந்துள்ள கொரோனா தொற்றாளர்கள் இன்று கொரோனா வைரசை சமூகத்தில் பரப்ப ஆரம்பித்துள்ளனர்.

ஆகவேதான் அடுத்த இரு வாரங்கள் மிகவும் அச்சுறுத்தலான காலமாக நாம் கருதுகின்றோம். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட அதிக வாய்ப்புக்கள் உள்ளது.

ஆகவே இதிலிருந்து விடுபட வேண்டுமானால் அதில் பிரதான பங்களிப்பை பொதுமக்களே முன்னெடுக்க வேண்டும். தாமாக நோயினை காவும் செயற்பாடுகளை கைவிட்டு மிகவும் அவதானமாக இருக்க முடியுமென்றால் அதுவே சிறந்த வழிமுறையாகும்.

சமூக இடைவெளியை முடிந்தளவு கையாண்டு தம்மை தாமே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இரண்டு கைகளை நீட்டும் தோற்றத்தில் எந்தவொரு நபரையும் நெருங்க விட வேண்டாம்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.