இலங்கைக்கு பொருந்தும் வகையில் சர்வதேச தரத்திற்கு அமைய புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அமைச்சர் ,பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் ஆலோசனைக்கு அமைய, இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
அதனடிப்படையில், முதலாம் தரத்தில் இருந்து 13 ஆம் தரம் வரை பாடத்திட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
நாட்டின் பொருளாதார முறைமை , தொழில் சந்தை ஆகியவற்றை உள்ளடக்கியதாக புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பிலான கருத்துக்கள் மற்றும் யோசனைகளை மாவட்ட ரீதியாகப் பெற்றுக்கொள்வதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
கல்வித்துறைசார் வல்லுநர்கள், மாணவர்கள், வர்த்தகப் பிரிவினர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைப் பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா குறிப்பிட்டார்.
புதிய பாடத்திட்டத்தின் மூலம் தற்போதைய கல்வி முறையூடாக மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதிய பாடத்திட்டத்தை அடுத்த வருடம் முதல் பாடசாலைகளில் அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.