அதிகரிக்கப்படுகின்றதா பால்மாவின் விலை? முக்கிய தீர்மானம் நாளை!

0

வாழ்க்கை செலவு குழு நாளை(வெள்ளிக்கிழமை) அலரி மாளிகையில் கூடவுள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

பால்மா விலை அதிகரிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

உலக சந்தையில் பால்மா விலை அதிகரிப்பு, கப்பல் கட்டணம் உயர்வு மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் வீழ்ச்சி என்பனவற்றைக் கருத்திற்கொண்டு பால்மா விலையினை அதிகரிக்குமாறு அதன் இறக்குமதியாளர்கள் தொடர்ச்சியாக அரசாங்கத்தைக் கோரியிருந்தனர்.

எனினும் விலை அதிகரிப்பிற்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை. இதனையடுத்து, தங்களுக்கு ஏற்படும் நட்டத்தினை கருத்திற் கொண்டு பால்மா இறக்குமதியினை அதன் இறக்குமதியாளர்கள் இடைநிறுத்தியிருந்தனர்.

இதனால் சந்தையில் பால்மாவுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டது. குறித்த விடயம் தொடர்பில், பால்மா இறக்குமதியாளர்களுக்கும், நிதி அமைச்சருக்கும் இடையில் கடந்த 19ஆம் திகதி சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இதன்போது ஒரு கிலோகிராம் பால்மா விலையினை 350 ரூபாயினால் அதிகரிக்க வேண்டும் என இறக்குமதியாளர்களால் கோரப்பட்டது.

எனினும் ஒரு கிலோகிராம் பால்மா விலையினை 200 ரூபாவினால் அதிகரிப்பதற்கு இணக்கம் வெளியிடப்பட்டது

இதற்கமைய இது தொடர்பிலான இறுதி தீர்மானமானது நாளை இடம்பெறவுள்ள வாழ்க்கை செலவு குழுக்கூட்டத்தில் எட்டப்படவுள்ளது.