அதிகரிக்கும் கொரோனா அச்சுறுத்தல் – நவம்பர் மாதம் எச்சரிக்கையுடையது என தெரிவிப்பு!

0

ஒக்டோபர் மாதத்தை விட நவம்பர் மாதம் எச்சரிக்கையுடையதாகவுள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஒக்டோபர் மாதத்தில் பத்தாயிரத்திற்கு சற்று குறைந்தளவான தொற்றாளர்களே இனங்காணப்பட்டனர்.

எனினும் இரு வாரங்களில் 6000 தொற்றாளர்கள் வரை இனங்காணப்படக் கூடிய நிலைமை நவம்பர் மாதத்தில் ஏற்பட்டுள்ளது.

ஒக்டோபர் மாதத்தை விட நவம்பர் மாதம் அபாய நிலையிலுள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இது போன்றே மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

சனிக்கிழமை மரணங்கள் எவையும் இனங்காணப்படவில்லை என்றாலும், ஞாயிறன்று 5 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இவற்றில் பெருமளவானவை கொழும்பில் பதிவாகிய மரணங்களாகும். அதற்கமைய அபாயம் எங்கு காணப்படுகிறது என்பது தெளிவாகிறது.

கொழும்பு மாநகரசபையை அண்மித்த பகுதிகள் தற்போதும் எச்சரிக்கை மிக்கவையாகவே உள்ளன. இவற்றை நாம் சரியாக இனங்காண வேண்டும்.

அதன் காரணமாகவே மேல் மாகாணத்தில் பல பொலிஸ் பிரிவுகளின் தனிமைப்படுத்தல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் தன்மை நேரடியாக கண்காணிக்கப்பட வேண்டியது மிக முக்கியமானதாகும்.

அதே போன்று பொலிஸ் கொத்தணி தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.

காரணம் பொலிஸ் உத்தியோகஸ்தர்களில் பெருமளவானோர் தனிமைப்படுத்தப்பட்டால் அது தொற்றாளர்களை இனங்காண்பதில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

எவ்வாறிருப்பினும் பொலிஸ் கொத்தணி தற்போது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்தும் பேணுவதற்கு தொழிநுட்ப ரீதியான நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்பட வேண்டும்“ எனத் தெரிவித்துள்ளார்.