அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் கவலை

0

சந்தையில் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட ஏனைய பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அரசாங்கம் என்ற வகையில் தாம் கவலை அடைவதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

பருப்பு, சீனி, அரிசி, பால்மா ஆகியவற்றிற்கு மேலதிகமாக மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளன.

பூசணி மற்றும் வெள்ளரிக்காய் தவிர்ந்த ஏனைய அனைத்து மரக்கறிகளும் கிலோவொன்று 150 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகப் பொருளாதார மத்திய நிலையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரிய வெங்காயம் கிலோவொன்று 120 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் இன்று (26) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பின்போது, அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரனவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதன்போது , அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் அரசாங்கம் என்ற வகையில் தாம் கவலை அடைவதாக அவர் தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்படும் வர்த்தகப் பொருட்கள் மற்றும் சில மருந்துகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், இலங்கையினால் வெளிநாடுகளுக்குச் செலுத்தப்பட வேண்டிய தொகையும் அதிகரித்துள்ளது.

இலங்கை மாத்திரமின்றி அபிவிருத்தி அடைந்த நாடுகளிலும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும், எதிர்வரும் சில மாதங்களில் குறித்த பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடையும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.