அனைத்து அரசியல் கைதிகளும் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுடன், பயங்கரவாத தடைச்சட்டமும் நீக்கப்பட வேண்டும் – சாணக்கியன்!

0

சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளும் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுடன், பயங்கரவாத தடைச்சட்டமும் நீக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக நேற்று(சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இன்றைய தினம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக கைதிகளினுடைய நலனுக்காக செயல்படும் அமைப்பு ஒன்றுடன் இணைந்து நானும் இந்த போராட்டகளத்தில் போராடிக்கொண்டிருக்கின்றேன்.

இந்த போராட்டமானது இன்று முன்னெடுக்கப்படுவதற்கான முக்கிய காரணங்களாக, நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல், ஏனைய கைதிகளினுடைய நலனில் அக்கறை கொண்டே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று சர்வதேச சித்திரவதைகளுக்கு எதிரான நாளாக காணப்படுகின்றது. இன்றைய குறித்த நாளில் ஒரு அடையாளமாக நாங்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளோம்.

இதில் விசேடமாக நாங்கள் முன்வைத்துள்ள கோரிக்கை என்னவென்றால், சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் நலன் சார்ந்து இந்த அரசாங்கம் செயற்பட வேண்டும்.

நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள், அதாவது ஒரு சிலருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்தாலும் கூட, அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவில்லை. ஆனால் சக பாராளுமன்ற உறுப்பினரை கொலை செய்தவருக்கு ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக நாங்கள் இன்று முன்வைக்கும் முக்கிய கேள்வி என்வென்றால், இலங்கையில் அரசியல் கைதிகள் எத்தனையோ பேர் இருக்கின்றனர். இந்த அரசியல் கைதிகளில் 16 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதை நாங்கள் வரவேற்கின்றோம். இந்த முன்னெடுப்பிற்காக நாங்கள் அரசாங்கத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

எனினும் முகப்புத்தகத்தில் பதிவிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை ஏன் நீங்கள் விடுதலை செய்யவில்லை. உங்களுக்கு உதவி செய்தவர்கள், நாட்டிலே பிரபல்யமான ஊடகம் ஒன்றினை கையிலே வைத்திருப்பவர்கள், பணம் படைத்தவர்களுக்கு நீங்கள் பொதுமன்னிப்பு வழங்குவீர்கள் ஆனால் அனைத்து அரசியல் கைதிகளுக்கும் நீங்கள் பொதுமன்னிப்பு வழங்கவில்லை.

சிங்கள தரப்பிலேயும் கூட, இஸ்லாமிய மக்களும் கூட பல்வேறு விடயங்களுக்காக சிறையிலே ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களுக்கு ஏன் பொதுமன்னிப்பு வழங்க முடியாது.

அதேபோன்று இன்னுமொரு முக்கிய விடயமாக பயங்கரவாதத்தடைச் சட்டம். இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தி எத்தனையோ இளைஞர்களை கடந்த ஒரு வருடத்திற்குள் கைது செய்துள்ளனர்.

எத்தனையோ பேர் தமிழ்த்தரப்பிலிருந்து கடந்த 82ஆம் ஆண்டிலிருந்து கைது செய்யப்பட்டு இன்று அவர்களுக்கு என்ன நடந்தது என்று கூட நாங்கள் தெரியாத நிலையிலிருக்கின்றோம். எனவே இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தினையும் நீக்க வேண்டும் என்பதையும் நாங்கள் ஒரு கோரிக்கையாக நாங்கள் முன்வைக்கின்றோம்.

இன்றும் கூட இந்த அரசாங்கமானது ஒடுக்குமுறைகளை பயன்படுத்தி குறித்த போராட்டத்தில் பங்கேற்க முயன்றவர்களை தடுத்திருக்கின்றது. நாங்களும் சுகாதார நடைமுறைக்களை கடைப்பிடித்து. சமூக இடைவெளியினை கடைப்பிடித்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளோம். எங்களுடைய போராட்டம் தொடரும்.

ஒரு மகிழ்ச்சியான விடயம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பெரும்பான்மை இனத்தவர்களும் இங்கு இணைந்துள்ளனர். இது எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.