அனைத்து ஆயுர்வேத வைத்தியசாலைகளையும் திறந்து வைக்க தீர்மானம்

0

விசேட சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கலந்துரையாடல் செயலணியின் தலைவர் பசில் ராஜபக்‌ஷ தலைமையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றுள்ளது.

பிரதமரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஆயுர்வேத வைத்திய முறைகள் தொடர்பில் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் அனைத்து ஆயுர்வேத வைத்தியசாலைகளையும் திறந்து வைக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அத்துடன் பிரதேச செயலக பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத மருந்தகங்கள் ஊடாக நடமாடும் மருத்துவ சேவையை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் வாடிக்கையாளர்கள் பெருமளவில் கொள்வனவு செய்யும் கொத்தமல்லி, இஞ்சி, மரமஞ்சள் போன்ற போன்ற ஔடதங்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

மேலும் சுகவீனமுற்றுள்ள நோயாளர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு தேவையான வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு ஆயுர்வேத திணைக்களத்தில் பதிவு செய்துள்ள வைத்தியர்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

அத்துடன் ஆயுர்வேத திணைக்களத்தில் தங்களை பதிவு செய்து நீண்டகாலமாக அதனூடாக சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களுக்கான மருந்துப் பொருட்களை தபால் மூலம் அனுப்பிவைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.