அனைத்து பாடசாலைகளிலும் 680 மில்லியன் செலவில் விசேட வசதி

0

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னர் அனைத்து பாடசாலைகளிலும் வெப்பநிலையை கண்டறியும் சாதனங்கள், கைகளை சுத்தம் செய்வதற்கான வசதிகள் மற்றும் விசேட அறைகள் ஆகியவை அமைக்கப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இதற்காக 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளுக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் இந்த வசதிகளை நிறுவுவதற்கு சுமார் 680 மில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும்அமைச்சர் கூறினார்.

மேலும், பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பெற்றோர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்று சில தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ள கூற்றுக்கள் தவறானவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மக்களை தவறாக வழிநடத்தும் சமூக ஊடகங்களில் வெளியாகும் தவறான கருத்துக்களைக் கண்டிக்கும் அதே வேளையில்,பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பான தேசியக் கொள்கை குறித்து பொய்யான வதந்திகளை பரப்புவதை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

அத்தோடு மாணவர்களின் பெற்றோருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இந்த பாடசாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்தும்போது பெற்றோரிடமிருந்து பணம் பெற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும் அவர் கூறினார்.

கற்றலுக்கு ஏற்ற சூழல் சுகாதார அதிகாரிகளால் முழுமையாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.