அபகரிக்கப்பட்டுள்ள வெள்ளிமலை பிள்ளையார் ஆலயத்தின் வயல்காணியை பெற்றுத்தருமாறு ஆலய பரிபாலனசபை கோரிக்கை

0

அபகரிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு- வடமுனை ஊத்துச்சேனை, வெள்ளிமலை பிள்ளையார் ஆலயத்தின் வயல்காணியை பெற்றுத்தருமாறு ஆலய பரிபாலனசபை கோரிக்கை விடுத்துள்ளது.

மட்டக்களப்பு- பொலன்னறுவை எல்லைக்கிராமமான வடமுனை ஊத்துச்சேனை, வெள்ளிமலை பிள்ளையார் ஆலயத்துக்கு சொந்தமான வயல்காணியை, முஸ்லீம் இனத்தைச் சேர்ந்த ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக ஆலய பரிபாலனசபை குறிப்பிட்டுள்ளது.

ஆகவே இந்த ஆலயத்துக்கு சொந்தமான 21 ஏக்கர் வயல் காணியை மீட்டுத்தருமாறு ஆலய பரிபாலன சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஆலய பரிபாலன சபையினர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்போது அவர்கள் மேலும் கூறியுள்ளதாவது, “இந்த ஆலயம் நூற்றாண்டுகளுக்கு மேற்பட்டதுடன் பொலன்னறுவை மாவட்டத்தில் முதல் பதிவு செய்யப்பட்ட ஆலயமாகும்.

மேலும், ஆலயத்தினை சுற்றி காணப்பட்ட ஊத்துச்சேனை, சிறிஓடை, கள்ளிச்சி ஓடை, குமாரபுர, வடமுனை ஆகிய 5 கிராமங்களில் தமிழ் சிங்கள மக்கள் வாழ்ந்துவந்தனர்.

இந்நிலையில் 1990 ம் ஆண்டு ஏற்பட்ட யுத்தத்தினால் தமிழ்மக்கள் தமது காணிகள் வீடுகளை விட்டு வெளியேறி வாழைச்சேனைக்கும் சிங்கள மக்கள் வெலிகந்தைக்கும் இடம்பெயர்ந்தனர்.

இதனால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆலயம், மக்கள் சென்று பராமரிக்கமுடியாத நிலையினையடுத்து ஆலய கூரைகள் உடைந்து பாரிய சேதமடைந்தது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் 2010 ம் ஆண்டு மக்கள் மீண்டும் குடியேறிய நிலையில் ஆலயத்துக்கும் செல்லும் வீதி மக்கள் பிரயாணிக்க முடியாதளவு சேதமடைந்துள்ளது.

ஆலயத்துக்கு முன்னாள் உள்ள ஆற்றிற்கு மறுபக்கம் 1926 ம் ஆண்டு வழங்கப்பட்ட காணி உறுதியுடனான 21 ஏக்கர் வயல்காணியாகும். இந்த காணியை 2010 ம் ஆண்டு முஸ்லீம் இனத்தைச் சேர்ந்த ஒருவர் தனது காணி என காணிபத்திரத்தை கொண்டு அபகரித்து வேளாண்மை செய்துவருகின்றார்.

இந்த ஆலயத்துக்கு சொந்தமான காணியை பெற்றுத்தருமாறு கிரான் பிரதேச செயலாளர் மற்றும் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தோம். அதற்கான தீர்வு இதுவரை கிடைக்கவில்லை.

அதேவேளை கடந்த மாதம் அந்த வயல்காணியை ஆலய நிர்வாகம் வேளாண்மை செய்வதற்காக உழுது, நெல்லை பயிரிட்டது. 21 நாட்களின் பின்னர் குறித்த நபர் உழவு இயந்திரம் கொண்டு அந்த வேளாண்மை பயிரை அழித்தார்.

ஆகவே ஆலயத்துக்கு சொந்தமான இந்த வயல்காணியை உரிய அதிகாரிகள் பெற்றுத்தரவேண்டும்” என ஆலய பரிபாலன சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.