ஊரடங்குச் சட்டம் காரணமாக தபாலகங்கள் திறக்கப்படாததால், செலுத்த முடியாமல் போன மோட்டார் வாகனங்களுக்கான அபராதப் பத்திரங்களுக்கான கட்டணங்களைச் செலுத்துவதற்கான சலுகைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர், நிதி அமைச்சின் செயலாளரின் இணக்கப்பாட்டுடன் இந்த சலுகை காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்ஜித் ஆரியரத்ன அறிவித்துள்ளார்.
எதிர்வரும் மே மாதம் 02 ஆம் திகதி வரை இந்த சலுகை காலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் வழங்கப்பட்டுள்ள அபராதப் பத்திரங்களுக்கு மாத்திரமே மேலதிக கட்டணங்கள் இல்லாமல் தபால் நிலையங்களில் அபராதப் பணத்தை செலுத்துவதற்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 16 தொடக்கம் 29 வரையான காலப்பகுதியில் வழங்கப்பட்டுள்ள அபராதப் பண பத்திரங்களுக்கு மேலதிக கட்டணத்துடன் அவற்றைச் செலுத்த மே 02ஆம் திகதி வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது.