அபிவிருத்தி என்ற போர்வையில் எமது பிரதேசங்களின் வளங்கள் அபரிக்கப்படுகின்றது – சாணக்கியன் ஆதங்கம்!

0

அபிவிருத்தி என்ற போர்வையில் எமது பல பிரதேசங்களின் வளங்கள் அபரிக்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு மக்களை ஏமாற்றி கடந்த காலத்திலே வாக்குக்குகளை பெற்ற ஆளுந்தரப்பு அரசியற் பிரமுகர்கள் யாரும் இவை தொடர்பில் குரல்கொடுத்ததாகத் தெரியவில்லை. எங்களுக்குள்ளேயே சிலரை வைத்து பிரச்சினைகளை வளர்த்துவிட்டு அதில் தாங்கள் பலனடைவதற்குப் பலர் முயற்சிக்கின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்று(திங்கட்கிழமை) திருக்கோவிலில் இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அபிவிருத்தி என்ற போர்வையில் எமது பல பிரதேசங்களின் வளங்கள் அபரிக்கப்படுகின்றது. இது எமது அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகின்றது.

அம்பாறை மாவட்டத்திலும் இல்மனைட் பிரச்சினை பாரிய பிரச்சினையாக இருக்கின்றது. எமது வடக்க கிழக்கு மக்களை ஏமாற்றி கடந்த காலத்திலே வாக்குகள் பெற்ற ஆளுந்தரப்பு அரசியல் பிரமுகர்கள், நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவர்களோ, தெரிவு செய்யப்படாதவர்களோ யாரும் இவை தொடர்பில் குரல்கொடுத்ததாகத் தெரியவில்லை.

கடந்த காலங்களில் அபிவிருத்தி என்ற விடயங்களை நம்மவர்களும் மேற்கொண்டார்கள். ஆனால் அவர்கள் விளம்பரப்படுத்தவில்லை. ஆனால் நாங்கள் செய்யத்தவறிய ஒரே ஒரு விடயத்தை மாத்திரம் விளம்பரப்படுத்தி கடந்த தேர்தலில் எங்களுடைய நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு ஒரு தனிநபரின் செயற்பாடு காரணமாக இருந்தது.

எங்களுக்குள்ளேயே சிலரை வைத்து பிரச்சினைகளை வளர்த்துவிட்டு அதில் தாங்கள் பலனடைவதற்குப் பலர் முயற்சிக்கின்றார்கள்.“ எனத் தெரிவித்துள்ளார்.