அமைச்சரவையில் ஐந்து ராஜபக்சக்கள்! அதிஉயர் சபையிலும் முன்வரிசையில் நான்கு ஆசனங்கள்!!

0

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச நிதி அமைச்சராக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று முற்பகல் பதவிப்பிரமாணம் செய்தார்.

அத்துடன் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச்செயற்படுத்துகை அமைச்சு பதவி பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அரசமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுகளின் எண்ணிக்கை 30 ஆக வரையறுக்கப்பட்டது. 20 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக ’19’ இல்லாது செய்யப்பட்டாலும் மேற்படி சரத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை.

அமைச்சரவையின் பிரதானியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திகழ்கின்றார். பிரதமர் மஹிந்த ராஜபக்ச வசம் முக்கியமான அமைச்சுகளும், திணைக்களங்களும் உள்ளன. சமல் ராஜபக்சவும் அமைச்சராக செயற்படுகின்றார். நாமல் ராஜபக்சவுக்கு விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் 5ஆவது ராஜபக்சவாக அமைச்சரவைக்குள் நுழைந்துள்ளார் பஸில் ராஜபக்ச.

நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி பக்கம் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்படுவது சம்பிரதாயம். அத்துடன் கட்சித் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்படும்.

அந்தவகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அமைச்சர் சமல் ராஜபக்ச, அமைச்சர் பஸில் ராஜபக்ச ஆகியோர் ஆளுங்கட்சியில் முன்வரிசையில் அமர்வார்கள். அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி மூன்று மாதங்களுக்கு ஒரு தடவையேனும் ஜனாதிபதி கட்டாயம் நாடாளுமன்றம் வரவேண்டும். அவர் சபைக்கு வராத காலப்பகுதியில்கூட ஜனாதிபதிக்குரிய ஆசனம் ஒதுக்கப்பட்டே இருக்கும்.

அதேவேளை, ஷசீந்திர ராஜபக்ச , நிபுண ரணவக்க போன்ற ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களும் சபையில் இருக்கின்றனர். சமல் ராஜபக்சவின் மகனான ஷசீந்திர ராஜபக்சவுக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. நிபுண ரணவக்கவுக்கு மாத்தறை மாவட்ட அபிவிருத்திக்குழு தலைமைப்பதவி வழங்கப்பட்டுள்ளது.

-ஆர்.சனத்-