‘அம்பன்’ (Amphan) சூறாவளியின் தாக்கம் இன்று(வியாழக்கிழமை) முதல் குறைவடையக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் முதல் மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையிலும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 முதல் 65 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
காற்றின் வேகம் அதிகரிப்பதால் கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் அவதானத்துடன் செயற்படுமாறு கடல்சார் ஊழியர்களுக்கும் மீனவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, காலி ஆகிய மாவட்டங்களில் 50 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அதிக மழை வீழ்ச்சியினால் களு, கிங் மற்றும் நில்வளா கங்கைகளில் அதிகரித்த நீர் மட்டம் தற்போது குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் ஆறுகளின் இரு மருங்கிலும் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.