அரசாங்கத்தினை கண்டு அஞ்சுகின்றீர்களாக இராஜாங்க அமைச்சரிடம் சாணக்கியன் கேள்வி!

0

அரசாங்கத்தினை கண்டு அஞ்சுகின்றீர்களாக என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் இணைத்தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜயம்பத் தலைமையில் நேற்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியம், கோவிந்தன் கருணாகரம், கிழக்கு மாகாணசபையின் பிரதம செயலாளர் துஷித பி விஜயசிங்க, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன், மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்ட ஆரம்பத்தில் கடந்த கால செயற்பாடுகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் தெளிவுபடுத்த முற்பட்டபோது குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாவட்டத்தில் நெருப்பாகவுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வினைக்கண்ட பின்னர் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் கதைக்கலாம் என தெரிவித்ததை தொடர்ந்து அங்கு பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன.

குறிப்பாக மயிலத்தமடு, மாதவனை பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய பயிர்ச்செய்கை காரணமாக அங்கு கால்நடைவளர்ப்போர் பாதிப்புகளை எதிர்நோக்குவதுடன் எதிர்காலத்தில் இரண்டு சமூகங்களிடையே வேறு விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் இங்கு சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.

அதனை தொடர்ந்து மயிலத்தமடு, மாதவனை பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடுமையான வாதங்களை முன்வைத்தார்.

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் சட்ட விரோதமான முறையில் சிலர் காணிகளில் சோளன் செய்கை மேற்கொள்வதாகவும் இதன் காரணமாக அப்பகுதியில் முரண்பாடுகள் இரு சமூகங்களுக்குள் ஏற்படும் நிலையுள்ளதாகவும் சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.

2010ஆம் ஆண்டு தற்போதைய அபிவிருத்திக்குழுவின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சராவிருந்த சந்திரகாந்தனின் காலப்பகுதியிலேயே குறித்த பகுதி தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு அதற்கான குழு அமைக்கப்பட்டு குறித்த பகுதியை கால்நடை மேய்ச்சல் காணியாக வர்த்தமானிப்படுத்த பரிந்துரைசெய்யப்பட்ட காணிக்குள்ளேயே தற்போது சேனைப்பயிர்ச்செய்கை செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக இங்கு நாடாளுமன்ற உறுப்பினர் கருணாகரன் தெரிவித்தார்.

எனினும் குறித்த பகுதியில் தேசிய கொள்கைகளுக்கு அமைவாகவே சோளன் செய்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அது ஒரு தேசிய நிகழ்ச்சி திட்டத்தில் முன்னெடுக்கப்படுவதாகவும் கிழக்கு மாகாண ஆளுனரினால் சுட்டிக்காட்டப்பட்டது.

எனினும் கால்நடை வளர்ப்போர் மாடுகளை மேய்க்கும் இடங்களில் அத்துமீறி இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் இதனை ஒரு திட்டமிட்ட காணி அபகரிப்பு செயற்பாடாகவும், சட்ட விரோத செயற்பாடாகவும் காணப்படுவதனால் இதனை தடுத்து நிறுத்துவதற்கு மாவட்ட அபிவிருத்திக்குழு நடவடிக்கையெடுக்கவேண்டும் என இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

குறித்த பகுதியில் சட்ட விரோத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது, அதனை உரிய தரப்பினர் தடுத்து நிறுத்தவேண்டும் என மாவட்ட அபிவிருத்திக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.