அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாடே புறக்கணிப்பிற்கு காரணம் – சஜித்!

0

பிரதமரினால் எதிர்வரும் 4ம் திகதி கலந்துரையாடலுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது.

இது குறித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள அக்கட்சி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பழைய நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட மாட்டேன் என்று கூறிய அதேவேளை பழைய நாடாளுமன்றத்தின் 225 உறுப்பினர்களுடன் ஒரு சந்திப்பைக் கோரும் பிரதமரின் இந்த அறிவிப்பில் இரட்டை நிலைப்பாடு இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் பழைய நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மீண்டும் கூட்டி நாட்டின் நெருக்கடி குறித்து விவாதிக்க வேண்டும் என்பதே தங்களின் நிலைப்பாடு என்றும் ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் திங்கட்கிழமை காலை பழைய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்திருந்தார். குறித்த அழைப்பினை மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் நிராகரிப்பதாக அறிவித்துள்ளன.

இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொள்வதற்கு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.