அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்படுவதாக யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.
யாழ். மாநகரசபையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில், ‘மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப யாழ். மாநகரசபையினைக் கலைத்து அரசாங்கத்திற்கு சார்பாக இந்த மாநகரசபையைப் பொறுப்பேற்பதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் செயற்பட்டு வருகின்றனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் 2015ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதற்காக வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் எனத் திரிந்தவர்கள்.
அதேபோல், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் கோட்டாபய ராஜபக்ஷவை வெல்ல வைப்பதற்காக பல பிரயத்தனங்களை செய்தவர்கள்.
தற்போது மாநகரசபையினைக் கலைப்பதற்காக மஹிந்த குடும்பத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அவர்களின் கைக்கூலியாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சிலர் செயற்படுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.