இலங்கையில் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பவர்களுக்கு ஒரு சட்டம் ஏனையவர்களுக்கு ஒரு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் பொதுவான சட்டம் ஒன்று காணப்படுமானால், அது அனைவருக்கும் சமனானதாக இருக்கவேண்டும்.
ஆனால் அண்மைக்காலமாக இந்த நாட்டினை பீடித்துள்ள கொரனா அச்சுறுத்தல் காரணமாக நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்கள் அதிகார வர்க்கத்திற்கு ஒரு சட்டமும் ஏனைய பிரிவினருக்கு ஒரு சட்டமாக காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குகின்றவர்கள், அரசாங்கத்திற்கு ஆதரவாக பேசுகின்றவர்கள் இந்தவேளைகளில் சட்ட விலக்கு அளிக்கப்படுகின்றது.
ஆனால் சாதாரண பொதுமக்கள், அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்காதவர்களுக்கு சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படுகின்றது.
இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக பக்கச்சார்பானதாகவும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்காதவர்களுக்கு எதிரானதாகவுமே இருந்து வருகின்றது.
இன்றைய சூழ்நிலையிலும் முன்னெடுக்கப்படும் சட்டதிட்டங்களும் அவ்வாறே காணப்படுகின்றன.
இன்று ஒருவர் இறக்கும்போது அவரது உடலை உடனடியாக அடக்கும் செய்யுறுமாக பாதுகாப்பு தரப்பினராலும் சுகாதார துறையினராலும் உறவினர்களுக்கு அழுத்தங்கள் வழங்கப்படுகின்றது.
தற்போதுள்ள சட்ட நடைமுறையில் அவற்றினை உடனடியாக அடக்கம் செய்யப்பட வேண்டும், சுகாதார சட்டதிட்டங்கள் கடைபிடிக்கப்படவேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு இந்த அழுத்தங்கள் வழங்கப்படுகின்றது.
ஒருவர் உயிரிழக்கும்போது அவர்களது உறவினர்கள் வந்துசேருவதற்குகூட நேரம் வழங்கப்படாத நிலையில், குறித்த சடலத்தினை அடக்கம் செய்யுமாறு அழுத்தங்கள் வழங்கப்படுகின்றன.
ஆனால் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குபவர், அரசுக்கு ஆதரவாக செயற்படுவபர்கள் என்ற காரணத்திற்காக ஐந்து தினங்கள் அமைச்சர் ஒருவரின் சடலத்தினை பல்வேறு இடங்களில் கொண்டுசென்று அஞ்சலி செலுத்துவதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது அந்த அமைச்சருக்கு எதிரான கருத்தோ அந்த சமூகத்திற்கு எதிரான கருத்தோ அல்ல. இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பான கருத்து மட்டுமே.
சட்டம் என்றால் அனைவருக்கும் சமனானதாக இருக்கவேண்டும், ஏனையவர்கள் இறக்கும்போது அந்த குடும்பத்திற்கும் இந்த சூழ்நிலையேற்படுத்தப்பட வேண்டும்.
இதுவே எமது கோரிக்கையே தவிர வேறு எந்தவித அரசியல் நோக்கமோ காழ்ப்புணர்ச்சியோ இல்லை. சட்டம் அனைவருக்கும் சமமானதாக இருக்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.