அரசாங்கம் பிள்ளையினையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகிறது! சாணக்கியன்

0

இந்த அரசாங்கம் பிள்ளையினையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் செயற்பாடுகளையே முன்னெடுத்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கடந்த சில வாரங்களாக நடைபெற்றுவரும் செயல்களை பார்க்கும்போது வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள், தமிழ் அரசியல் தரப்புகள், தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகள் இது குறித்து கவனம் செலுத்தவேண்டிய மிகவும் ஆபத்தான நிலைமையினை நாங்கள் காணமுடியும்.

நேற்றைய தினம் பாதுகாப்புச் செயலாளர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்து ஒரு கூட்டத்தினை மாவட்ட செயலகத்திலே நடத்தியிருக்கின்றார். இது தொடர்பாக மட்டக்களப்பு அரசாங்க அதிபருக்குக்கூட அந்த கலந்துரையாடல் என்ன விடயம் பற்றியது என்பது தெரியாத ஒரு நிலைமை. மாவட்டத்தின் அரசாங்க அதிபர் தான் மாவட்டத்திற்கான அரச நிர்வாக சேவைத்தலைவராவார்.

மாவட்ட அரசாங்க அதிபருக்கே தெரியாமல் மாவட்ட செயலகத்தில் ஒரு கூட்டம் நடப்பதாக இருந்தால் அது ஒரு ஆபத்தான நிலைமையாகவே நாங்கள் பார்க்க வேண்டும். இன்றைய தினம் திருகோணமலையிலும் கூட இதே கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இந்தக் கூட்டத்தில் என்ன விடயங்களை கதைக்கின்றார்கள் என்பது தெரியாது. ஆனால் எங்களுடைய மாவட்டத்திற்கு தமிழர் ஒருவரை அபிவிருத்திக்குழுத் தலைவராக நியமித்திருந்தும்கூட இவ்வாறான விடயங்கள் தொடர்பில் அவர்கள் கவனத்தை செலுத்தாமல் விடுவது மிகவும் கவலையான விடயமாகும்.

அண்மையில்கூட தைப்பிறந்தால் வழிப் பிறக்கும் என்று ஒரு அரசியல்வாதி மட்டக்களப்பு மாவட்டத்தில் சொல்லியிருக்கின்றார். தைப்பிறந்தால் தங்களுடைய பொருளாதாரத்தை வளர்ப்பதற்குத் தான் வழிப்பிறக்கும் என்று அவர் சொன்னாரா அல்லது தமிழ் மக்களின் எதிர்காலத்தை நோக்கி சொன்னாரா என்ற சந்தேகம் எங்கள் மனதில் இருக்கின்றது.

நேற்றைக்கு முன்தினம்கூட நான் பிரதமரின் தலைமை உத்தியோகத்தர் யோஷித ராஜபக்ச அவர்களை சந்தித்திருந்தேன். இது தொடர்பாகக்கூட சில விமர்சனங்களை சில முகநூலூடாகவும் பதியப்படாத சில வலைத்தளங்களினூடாகவும் பார்க்கக்கூடியதாக இருந்தது. முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதருமானவர் தான் தற்போது நிதி அமைச்சராகவும் வீடமைப்பிற்கான அமைச்சராகவும் இந்துக்கலாசார அமைச்சராகவும் இருக்கின்றார்.

இதுபோன்ற பல அமைச்சுகளுக்கு அவரே அமைச்சராக இருக்கின்றார். அதே போல பல திணைக்களங்கள் அந்த அமைச்சினுள் இருக்கின்றன. நான் அவரை சந்தித்ததற்குக் காரணம் நாங்கள் எல்லா விடயங்களையும் பிரதமரூடாக அவரது நேரடிக் கவனிப்பிற்கு கொண்டு சென்று கட்லப் ஒன்றை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கொண்டுவருவதற்கு அவரை சந்தித்து களுத்துறை மாவட்டத்திற்கு செல்லவிருந்த அந்த இருதய நோயி ஆய்வகத்திற்கான உபகரணங்களை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மாற்றும் செயற்பாட்டை நாங்கள் செய்திருந்தோம்.

மட்டக்களப்பில் கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட முடிக்கப்படாத ஆயிரக்கணக்கான வீடுகள் இருக்கின்றன. இந்த மாவட்டத்தில் இதுவரை ஒரேயொரு அபிவிருத்திக் குழுக்கூட்டம் தான் நடைபெற்றிருக்கின்றது. அதனை அபிவிருத்திக் குழுக்கூட்டம் என்று கூட சொல்ல முடியாது. ஒருவரை பிணையில் எடுப்பதற்காக அரசாங்கத்திற்கு சார்பாக கதைக்கின்ற ஒரு கூட்டமாகவே அது இருந்தது.

அந்தக்கூட்டத்தில்கூட ஒரு தீர்மானம் எடுத்து மாவட்ட செயலகத்தினூடாக வீடுகள் இல்லாது வீடுகள் முடிக்கப்படாமலிருப்பவர்களுக்கு எப்போது அவை முடியும் என ஒரு கடிதத்தை அனுப்பும்படி கோரியிருந்தும்கூட இதுவரை அந்தக் கடிதங்கள் கொழும்பை சென்றடையவில்லை. அது தொடர்பாக கொழும்பிலிருந்து வீடமைப்பு அதிகாரசபையின் அமைச்சர் மகிந்த ராஜபக்ச அவர்களுக்குக்கூட ஒரு கடிதம் வரவில்லை. இந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடலை அந்த இடத்தில் செய்யவேண்டியதாக இருந்தது.

அதுமட்டுமல்லாது மாவட்டத்திலிருக்கின்ற பல பிரச்சினைகளை நான் அவரது கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தேன். இவ்வாறான சந்திப்புகளை நாங்கள் மேற்கொள்ளாவிட்டால் மக்களுடைய பிரச்சினைகளை நாங்கள் தீர்க்க முடியாது.

அண்மையில் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் ஒரு அமைச்சின் செயலாளரோடு எடுக்கப்பட்ட புகைப்படத்தினை முகநூலில் போட்டிருந்தார். மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் ஒரு அமைச்சரை சந்திக்காமல் அமைச்சின் செயலாளரை சந்தித்து ஒரு புகைப்படத்தினை போடுமளவிற்கு மட்டக்களப்பின் அரசியலும் அரசியல் தலைமைத்துவமும் ஒரு மோசமான நிலைக்கு போயிருக்கின்றது என்பதை நாங்கள் அறிய வேண்டும்.

ஏறாவூரிலிருந்து கொழும்பிற்கு புகையிரதம் ஊடாக மண்ணை ஏற்றும் விடயம் தொடர்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் அமைச்சர்களின் செயலாளர்களை சந்திக்கின்ற புகைப்படங்களை எல்லா இடங்களிலும் பார்க்க முடிகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களுடைய எதிர்கால நலன் கருதி நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் மிகவும் அவதானமான ஒரு காலத்தில் இருக்கின்றோம் என்பதை அவதானிக்கின்றேன்.

அண்மையில் தொல்பொருள் திணைக்களத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்துமலையில் விதுர விக்கிரமநாயக்க அவர்கள் ஒரு புத்தர் சிலையை வைத்து மதவழிபாடு செய்ததை நாங்கள் பார்க்கின்றோம். 50-60 இராணுவ வீரர்கள், இராணுவத்தளபதி சகிதம் அங்கு சென்றுதான் அந்த நிகழ்வை அவர்கள் நடத்தியிருந்தார்கள்.

இதே நிலை தான் அன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் குசனார் மலைக்கும் வந்திருக்கும். நாங்கள் விதுர விக்கிரமநாயக்க அவர்கள் வந்த நேரம் எதிர்ப்பை தெரிவித்திருக்காவிட்டால் இன்று குசனார் மலையில்கூட ஒரு புத்தர் சிலையை வைத்து மதவழிபாடுகளை நடத்தியிருப்பார்கள்.

வடமாகாணத்தின் சில ஆலயங்களின் நிர்வாகசபை உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கின்ற செயற்பாடுகளும் நடந்துகொண்டிருக்கின்றன. எதிர்வரும் காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற ஆலயங்களுக்குக்கூட மதவழிபாடுகள் செய்தல் என்ற அடிப்படையில் குற்றச்சாட்டுகளை வைத்து சட்ட நடவடிக்கை எடுப்பார்களா என்ற சந்தேகம் மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்கள் மத்தியில் நிச்சயம் பதிய வேண்டும்.

எங்கள் மாவட்டத்தில் அனைவரும் கூறிய விடயம் என்னவென்றால் அபிவிருத்தியும் உரிமையும் வேண்டும் என்பதாகும். தற்போதைய நிலையில் ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்கள் அபிவிருத்தியும் செய்யமாட்டார்கள், உரிமை தொடர்பாகவும் குரல் கொடுக்கமாட்டார்கள்.

உரிமை என்று சொல்கின்றபோது அவர்கள் கதைத்து எங்களுக்கு மாகாணசபை அதிகாரமோ அல்லது தனிநாட்டையோ பெற்றுத் தருவதல்ல. ஆகக் குறைந்தது எங்கள் மாவட்டத்திலிருக்கின்ற வளங்களை நாங்கள் பாதுகாக்க வேண்டும்.

இன்று கூட நாசிவன் தீவில் நடக்கின்ற மண் அகழ்விற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மாவட்டத்தில்; ஒவ்வொரு நாளும் ஒரு ஆர்ப்பாட்டங்கள் நடந்துவருகின்றன. கெவிலியாமடு பிரதேசத்தில் ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தது. அதற்கு முன்னர் சித்தான்டி சந்திவெளி பிரதேசத்தில் பண்ணையாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தது. கடந்த மாதம் ஐந்து பண்ணையாளர்களை கொண்டு சென்று மகாஓயா பொலிஸில் வைத்திருந்து அவர்களை அடித்து சித்திரவதை செய்தது தொடர்பாக ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத்திலே எந்தவொரு விடயமும் நடக்காமல் ஆர்ப்பாட்டங்கள்தான் நடந்துகொண்டிருக்கின்றன.

நாங்கள் எங்களுடைய உரிமைக்காக எவ்வளவு தூரம் சண்டை பிடிக்க வேண்டியதாயிருக்கின்றது என்பதை இதன் மூலம் மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஒருசில அரசியல்வாதிகள் வரவிருக்கின்ற மாகாணசபைத் தேர்தலில் தங்கள் வாக்கு வங்கிகளை அதிகரிப்பதற்காக செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். இது குறித்து மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ஒரு கிராமசேவையாளர் பிரிவிற்கு ஐந்து வீடுகள் என்ற திட்டம் வந்திருக்கின்றது. அந்த ஐந்து விடுகள் கிராமசேவையாளர் அந்த கிராமங்களுக்கு சென்று வீடுவீடாகச் சென்று அவர்களது கஷ்டங்களை பார்த்து ஐந்துபேரை அடையாளப்படுத்தியதன் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் விரும்பியவர்களுக்கு அந்த வீடுகளை வழங்கச்சொல்லி பெயர்ப் பட்டியலை அனுப்புவதென்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாகும்.

அந்த கிராமசேவையாளர்கள் கூட தங்களது கடமைகளை எவ்வாறு செய்வது என்ற பயத்துடன் இருக்கின்றனர். ஏனென்றால் வீடுவீடாகச் சென்று மிகவும் கஷ்டப்பட்டவர்களை அடையாளப்படுத்தி அவர்களுக்கு வீடுகளை கொடுக்காமல்,ஒரு சில அரசியல்வாதிகளுக்கு பின்னால் திரிந்தவர்களுக்கு அந்த வீடுகளை வழங்கினால் அந்த கிராம சேவையாளருக்கு அந்த கிராமத்தில் கடமையாற்றமுடியாத நிலையே ஏற்படும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்வாகத்தில் இருக்கும் அரச அதிகாரிகள் மிகவும் கஸ்டமான நிலையில் இருக்கின்றார்கள். வெள்ளிக்கிழமை ஒரு கூட்டம், அதே விடயம் தொடர்பாக திங்கட் கிழமை இன்னுமொரு கூட்டம். ஆளுங்கட்சியைச் சேர்ந்த இரண்டுபேரும் இணைந்து அரச அதிகாரிகளுக்கு இருக்கும் கஷ்டத்தை ஏதொவொரு வழியில் குறைக்க வேண்டும்.

ஏற்கனவே அரச அதிகாரிகள் நல்ல தீர்மானங்களை எடுத்திருக்கும்பொழுது அதனையே இவர்களும் சொல்லவேண்டிய அவசியமில்லை. அந்த விடயங்கள் தொடர்பாக இவர்களுக்குத் தெரியாது. நெல் கொள்வனவு தொடர்பாக ஏற்கனவே வகுக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பாக மீண்டும் ஒரு வாரத்தில் இரண்டு நாட்களில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களுடைய அதிகாரப் போட்டிக்காக நடத்த முயன்றால் அரச அதிகாரிகள் எவ்வாறு வேலை செய்ய முடியும். மக்களுக்கு அவர்களால் சேவை செய்ய முடியாமல் இருக்கும்.

ஆகையால் தயவு செய்து உங்கள் அரசியல் சிறுபிள்ளைத்தனங்களுக்காக அரச அதிகாரிகளைப் பயன்படுத்தாதீர்கள். உங்களைவிட அவர்கள் படித்தவர்கள், உங்களைவிட அவர்கள் அனுபவமுள்ளவர்கள், உங்களைவிட அரச நிர்வாகத்தில் கூடிய நேரம், காலம் ஒதுக்கி சேவை செய்தவர்கள். அவர்களுக்கு இந்த விடயங்கள் தொடர்பாக நல்ல சிந்தனைகள் இருக்கின்றன.

அந்த சிந்தனைகளை நடைமுறைப்படுத்துவதற்கான நேரத்தை நீங்கள் வழங்க வேண்டும். அவர்களுடைய நேரத்தையும் வீணாக்கி மக்களுடைய எதிர்காலத்தையும் பாழாக்கக்கூடாது. எதிர்வரும் காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்களுடைய நலன்கருதி நீங்கள் செயற்படவேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோளாகும். உங்களுடைய அரசியல் பலத்தை காட்டுவதற்;கோ உங்களுடைய எதிர்கால அரசியல் வளர்ச்சிக்காகவோ நீங்கள் செயற்படக்கூடாது.

யுத்தம் முடிவடைந்து 11வருடங்கள் கடந்துள்ள நிலையில் புதிய ஆணைக்குழுவினை நியமித்து எதனையும் கண்டுபிடிக்கமுடியாது.இந்த நாட்டில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள்,இனப்படுகொலை நடந்துள்ளது,தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிகள் நடந்துள்ளது.இவையெல்லாம் உலகெங்கும் அறிந்த உண்மை.இது தொடர்பில் ஒரு குழுவினை நியமித்து ஆராயவேண்டிய அவசியம் இல்லை.

இந்த நாட்டில் ஜனாதிபதி குழுக்களை அமைப்பது தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும்.கிழக்கில் தொல்பொருள் செயலணி ஒன்று உருவாக்கப்பட்டது அதில் தமிழர்கள் எவரும் இல்லை.புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஆராய்வதற்கான குழுவில் பெயரளவில் ஒரு தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார்.பொதுவாக ஜனாதிபதி நியமிக்கும் ஆணைக்குழுக்களை ஏற்றுக்கொள்ளமுடியாத நிலையே உள்ளது.

இம்முறை ஜெனிவாவில் அரசாங்கத்திற்கு எதிரான கடுமையான தீர்மானங்கள் வரும், அதிலிருந்து தப்பவேண்டும் என்பதற்காக இவ்வாறான ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன.அத்துடன் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை தொடர்பாக சிறுபிள்ளைத்தனமான கருத்துகளை வெளியிடுவதை விடுத்து,இந்த நாட்டினை கட்டியெழுப்ப வேண்டுமானால் அங்கு நீங்கள் செய்யவேண்டிய உண்மையான செயற்பாடுகளை செய்யவேண்டும். எவ்வளவு காலத்திற்கு தப்பினாலும் என்றாவது ஒருநாள் பொறியில் சிக்கியேயாக வேண்டும்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தினை முழுமையாக சீனாவுக்கு வழங்கிய இந்த அரசாங்கம் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனை பகுதியை இந்தியாவுடன் இணைந்து அந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு ஏன் அச்சப்படவேண்டும்.வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தபோது அது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடாத்தியுள்ள நிலையில் அரசாங்கம் பிள்ளையினையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டியுள்ளது.

அரசாங்கத்தின் மொட்டு கட்சியில் உள்ள தொழிற்சங்கம் அதனை வழங்ககூடாது என தெரிவிப்பதும்,அரசாங்கம் இந்தியாவினை பகைக்ககூடாது என்பதற்காக தருகின்றோம் என்று கூறிவிட்டு அவர்களுடைய தொழிற்சங்கத்தினை வைத்தே அதற்கு எதிர்ப்பினை தெரிவிக்கும் செயற்பாட்டினை முன்னெடுத்தனர்.

இது இந்த அரசாங்கத்தின் வழமையான செயற்பாடாகும். சிங்கள மக்களை திருப்திப்படுத்த ஒரு சில கருத்துகளை தங்களது ஆதரவாளர்களை வைத்து வெளியிடுவது,அதனை சர்வதேசத்திடம் காட்டி சிங்க மக்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளது என்று சொல்வது.இவ்வாறான விடயங்கள் கடந்த காலத்திலும் நடந்தது.

சீனாவுக்கு ஃபோட் சிற்றி என்று கூறி இலங்கையில் கடலை நிரப்பி முழுமையாக அதன் உரிமையினை சீனாவுக்கு வழங்கமுடியுமானால் ஏன் இந்தியாவினைப்பார்த்து அச்சப்பட வேண்டும். தமிழர்கள் என்ற வகையில் இலங்கை அரசாங்கம் சீனாவினை நோக்கி செல்வதும் இலங்கை அரசாங்கத்தினை புறக்கணிப்பதையும் இந்தியா உணரவேண்டும்.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வினை வழங்குவோம் என்று இந்தியாவினையும் இலங்கை அரசாங்கம் ஏமாற்றிக்கொண்டிருக்கின்றது. இந்த விடயத்திலும் கூட இந்தியாவினை நேரடியாக ஏமாற்றுவதற்கான சதித்திட்டத்தினையும் செய்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.