அரசின் ‘இறுதி அஸ்திரம்’ ‘பஸில் இருக்க பயமேன்’! பஸில் பதவியேற்றுள்ள நிலையில் சில சலுகைகள் குறித்த ‘தற்காலிக’ அறிவிப்புகள் வெளியாகலாம்

0

ராஜாதி ராஜன், ராஜபக்ச குடும்பத்தின் மன்னன், பொருளாதாரத்தை மீட்கவந்த நவயுக கண்ணன், எங்கள் அண்ணன் பஸில் ராஜபக்ச வருகிறார், வருகிறார்” – என்ற பாணியிலான கோஷமே இலங்கை அரசியல் களத்தில் அண்மைக்காலமாக ஓங்கி ஒலித்தது – ஒலித்துக்கொண்டும் இருக்கின்றது.

பஸிலின் வருகைக்காக அவரின் சகாக்கள், தமிழகத்தில் அரங்கேறுவதுபோல அத்தனை அரசியல் கூத்துகளையும் தரமாகவும், சிறப்பாகவும் அரங்கேற்றினர். தரையில் அமர்ந்து மண்சோறு சாப்பிடுதல், மொட்டையடித்து அலகு குத்துதல், தீக்குளி இறங்குதல் போன்ற ஒரு சில சம்பவங்கள் மட்டுமே நடந்தேறவில்லை.

அதேபோல பஸிலின் ‘ரீ என்ட்ரி’ ஆளுங்கட்சிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில அமைச்சர்கள் கதிகலங்கி – விழிபிதுங்கி நிற்கின்றனர். மறுபுறத்தில் பஸிலுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக்கூறி அடுத்துவரும் நாட்களில் எதிர்வரிசையின் கிராம மட்டத்திலான அரசியல் ஆதரவாளர்கள் மொட்டு அணியில் சங்கமிக்கக்கூடும்.

சரிந்துள்ள பொருளாதாரத்தை மீட்கவே, மீட்பாராக பஸில் வந்துள்ளார் என அவரின் சகாக்கள் சரவெடி அறிவிப்புகளை விடுத்தாலும், இதன் பின்னணியில் மேலும் சில அரசியல் நகர்வுகள் உள்ளன என்பதே உண்மை. அது பற்றி ஆராய முன்னர் – பஸிலை நாடாளுமன்றம் கொண்டுவருவதற்காக வகுக்கப்பட்ட சில திட்டங்கள் தொடர்பில் பார்ப்போம்.

பஸிலுக்காக வந்த ‘20’

இரட்டைக் குடியுரிமை உடையோர் நாடாளுமன்றம் வருவதற்கு நல்லாட்சியின்போது கதவடைப்பு செய்யப்பட்டது.

இதனால் அமெரிக்க குடியுரிமையை கொண்டுள்ள பஸில் ராஜபக்சவுக்கு 2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலின் பின்னர் நாடாளுமன்றம் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த தடையை உடைக்கும் வகையிலான ஏற்பாடுகள் 20 ஆவது திருத்தச்சட்டத்தில் முன்வைக்கப்பட்டது. மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் சட்டம் வெற்றிகரமாகவும் நிறைவேறியது.

இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்றம் வருவதற்கான ஏற்பாடு 20 இல் இடம்பெற்றிருந்ததால் அதற்கு விமல்வீரவன்ச, உதய கம்மன்பில உட்பட சிங்கள தேசியவாத அமைப்புகளின் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

எனினும், ராஜபக்சக்கள் பின்வாங்கவில்லை. குறித்த ஏற்பாட்டை நீக்கவும் இல்லை. எதிர்ப்பலைகளை சமாளிப்பதற்காக பஸிலின் நாடாளுமன்ற வருகை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இல்லையேல் 20 நிறைவேறிய கையோடு அவர் சபைக்கு வந்திருப்பார்.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள நிலையில் தனது சகாக்கள் ஊடாக மீண்டும் வியூகம் வகுத்தார் பஸில்.

கையொப்பம் திரட்டுதல், ஊடக சந்திப்புகள் என அத்தனை அரசியல் கூத்துகளும் இனிதே இடம்பெற்றன. இறுதியில்தான் எரிபொருள் விலை உயர்வு விவகாரத்தை வைத்து உச்சகட்ட பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.

பஸிலுக்காக ஜயந்த கெட்டகொட பதவி துறப்பார் என்றே ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் மேலும் சிலரின் பெயர்கள் அடிபட்டன. பதவி துறப்பவருக்கு ஆஸ்திரேலிய தூதுவர் பதவி அல்லது மத்திய வங்கி ஆளுநர் பதவி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது.

கடைசியில் ஜயந்த கெட்டகொடவுக்கே அந்த அரசியல் தியாகத்தை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது.

அதேவேளை, நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு பதவியை ஏற்பார் என எதிர்ப்பார்க்கப்படும் பஸில் ராஜபக்சவின்கீழ் துறைமுக நகரம், முதலீட்டுச்சபை உட்பட முக்கிய நிறுவனங்களும் கொண்டுவரப்படவுள்ளன.

பஸில் ராஜபக்ச பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் எல்லா அமைச்சுகளிலும், திணைக்களங்களிலும் கையடிக்கும் அதிகாரம் அவருக்கு காணப்பட்டது.

அதாவது ‘சுப்பர்’ அமைச்சராகவே வலம்வந்தார். இம்முறையும் அவ்வாறு இடம்பெற்றுவிடுமோ என சில அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர்களும் அஞ்சுகின்றனர்.

எனவே, ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் இது தொடர்பில் எடுத்துரைத்து , சுயாதீனமாக இயங்கக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு அவர்கள் பெரும்பாடுபடக்கூடும். தயாசிறி போன்றோரின் உள்ளக்குமுறல்கள் இதற்கு சான்று.

இரட்டை குடியுரிமைகொண்ட பஸிலின் வருகைக்கு ஆரம்பத்தில் போர்க்கொடி தூக்கிய அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரை பஸில் தனித்தனியே சந்தித்து சமரசம் பேசி அவர்களை சரணடைய வைக்கும் வியூகத்தையும் கையாளவுள்ளார்.

இதன்ஓர் அங்கமாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவை அண்மையில் சந்தித்துள்ளார்.

( தான் பதவிக்கு வந்து 2 ஆண்டுகள் முடிவடைபதற்குள் புதிய அரசியலமைப்பின் ஊடாக இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் அரசியல் மற்றும் முக்கிய பதவிகளை வகிக்கமுடியாது என்ற ஏற்பாடு இடம்பெறும் என்ற உத்தரவாதத்தை ஜனாதிபதி வழங்கினார். அதன் அடிப்படையிலேயே 20 இற்கும் ஆதரவு என்று விமல், வாசு, கம்மன்பில, திஸ்ஸவித்தாரண உள்ளிட்டவர்கள் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி அறிவித்தனர் என்பது குறிப்படத்தக்கது.)

2024 ஜனாதிபதி தேர்தல்

2024 இல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்தே பஸில் மீண்டும் நாடாளுமன்ற அரசியலில் இறங்கியுள்ளார் என்ற பொது கருத்தும் நிலவுகின்றது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவும் கருத்து வெளியிட்டுள்ளார். அதாவது அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு பஸிலை கொண்டுவருவோம் என அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

பஸில் ராஜபக்ச ஜனநாயகத்தை விருப்பும் நடுநிலையான அரசியல்வாதியென்பதாலும், சிறுபான்மையின மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் ஆதரவு அவருக்கு இருப்பதாலும் சில கடும்போக்கு வாதிகளுக்கு பஸிலை பிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. எனவே, ஜனாதிபதி தேர்தல்தான் பஸிலின் இலக்கெனில் இவர்களையும் சமாளிக்கும் வகையிலான நகர்வொன்றை முன்னெடுக்க வேண்டிவரும்.

2030 ஜனாதிபதி தேர்தலில் நாமலுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே பஸிலுக்கு 2024 இல் வாய்ப்பு வழங்குவதற்கு பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

இரண்டாவது தடவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி அதிகாரப்பூர்வமாக எவ்வித அறிவித்தலையும் இன்னும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல எதிர்க்கட்சிகளை உடைத்து, எம்.பிக்களை விலைக்கு வாங்குவது பஸிலுக்கு கைவந்தகலை. பலமானதொரு கூட்டணியை அமைத்துள்ள ஐக்கிய மக்கள் சக்திக்கு பஸிலின் நகர்வுகள் நிச்சயம் தலையிடியை ஏற்படுத்தக்கூடும்.

பஸிலுக்கு அரசியல் களம் புதிதல்ல என்றபோதிலும் 2007 ஆம் ஆண்டு முதலே அவர் நாடாளுமன்ற அரசியலில் இறங்கினார்.

2005 இல் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியான பின்னர் அவரின் ஆலோசகராகச் செயற்பட்டார். 2010 பொதுத்தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் களமிறங்கிய அவர் வரலாற்று வெற்றியை பதிவுசெய்தார்.

2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஏற்பட்ட தோல்வியின் பின்னர் அமெரிக்காவுக்குச்சென்றார். சிறிதுகாலத்தின் பின்னர் நாடு திரும்பினார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை உருவாக்கினார்.

2018 உள்ளாட்சிமன்றத் தேர்தலில் மொட்டு கட்சி அமோக வெற்றிபெற்றது. கட்சி உருவாக்கப்பட்டு குறுகிய காலப்பகுதியிலேயே ஜனாதிபதித் தேர்தலிலும் வெற்றிபெற்றது.

அதன்பின்னர் நாடாளுமன்றத் தேர்தலில் மொட்டு கூட்டணிக்கு மட்டும் 145 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன. விகிதாசார தேர்தல் முறைமையின்கீழ் கட்சியொன்று பெற்ற அதிகூடிய ஆசனங்களின் எண்ணிக்கை இதுவாகும்.

நெருக்கடியான சூழ்நிலையில் பொருளாதாரத்தை முகாமை செய்வதில் பஸிலுக்கு அனுபவம் உள்ளது.

இதற்காக கீழ் மட்ட அரசியல் மற்றும் இதர பொறிமுறைகளின் ஆதரவை பெறுவதற்கான நுட்பங்களும் அவருக்கு தெரியும்.

அந்த அடிப்படையில் பஸிலின் வருகை ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான மொட்டு கூட்டணி அரசுக்கு பக்கபலமாக அமையும் என அரச விசுவாசிகள் நம்புகின்றனர்.

தற்போதைய சூழ்நிலையில் அரசுக்கு பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடன் சுமைகளும் உள்ளன. மக்கள் மத்தியிலும் அதிருப்தி அலைகள் உருவாகியுள்ளன.

ஜெனிவா நெருக்கடி உள்ளிட்ட சர்வதேச சிக்கல்களும் உள்ளன. ஆளுங்கட்சியினரின் பிரச்சாரத்தின் பிரகாரம் பஸில் வந்ததும், இப்பிரச்சினையெல்லாம் தீரும், நாட்டில் தேனும் பாலும் ஓடும் என்ற முடிவுக்கே மொட்டு கட்சிகளின் விசுவாசிகள் வரக்கூடும்.

பஸில் ராஜபக்ச பதவியேற்ற பின்னர் சில சலுகைகள் குறித்த ‘தற்காலிக’ அறிவிப்புகள் வெளியாகலாம். 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்திலேயே இதர விடயங்களை எதிர்ப்பார்க்க முடியும்.

பஸில் என்பவர், தற்போதைய நெருக்கடி நிலையை சமாளிப்பதற்காக ஏவப்பட்ட தற்காலிக அஸ்திரமா, அல்லது நிரந்தர தீவுக்காக – நாட்டின் நலனுக்காக ஏவப்பட்ட அஸ்திரமா என்பதற்கான பதில், காத்திருந்து பார்ப்போம் என்பதே…..!

ஆர்.சனத்