அரசியல் களத்தில் எவராலும் என்னை மௌனிக்கச்செய்ய முடியாது – தயாசிறி!

0

அரசியல் களத்தில் எவராலும் தன்னை மௌனிக்கச்செய்ய முடியாது என இராஜாங்க அமைச்சரும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளுக்கிடையிலான முறுகல் நிலை குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவின் வெற்றியில் சுதந்திரக்கட்சியின் பங்களிப்பும் உள்ளது. இதனை புரிந்துகொள்ளாமல், நன்றி மறந்து விமர்சிக்கின்றனர்.

சுதந்திரக்கட்சியின் ஆதரவு இல்லாதிருந்திருந்தால் கண்டி மாவட்டத்தில்கூட 50 ஆயிரம் வாக்குகளால் தோல்வியை சந்திக்க நேரிட்டிருக்கும் என்பதை திலும் அமுனுகம போன்றவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சியும் செய்கின்றது. அரசியலும் செய்கின்றது. ஆனால் சுதந்திரக்கட்சிக்கு இவ்விரண்டுமே இல்லாமல்போயுள்ளது.

எனவே, என்னை எவரும் மௌனிக்க வைக்கமுடியாது. நான்தான் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.