அரசியல் கைதிகளை விடுவிப்பதன் மூலம் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தலாம் – பிரதமரிடம் தெரிவித்தது கூட்டமைப்பு!

0

20 வருடங்களுக்கு மேல் சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோளை முன்வைத்தது.

நேற்று விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமரின் இல்லத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் 11 உறுப்பினர்கள் கலந்து கொண்டதோடு, பிரதமர் தரப்பிலிருந்து ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட சில அரசாங்கத் தரப்பு அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, நாடாளுமன்றம் மீள கூட்டப்படுவதையே நாம் விரும்புகிறோம் என சம்பந்தன் தெரிவித்தார். இதற்கு அரச தரப்பிலிருந்து எந்தப் பதிலும் இருக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தமது கோரிக்கைகளை கூட்டமைப்பினர் முன்வைத்தார்கள்.

கடந்த அரசின் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டுத் திட்டத்தின் கீழ், பயனாளிகள் வீடுகள் கட்டியும் நிதி விடுவிக்கப்படாமலுள்ளதை கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டினர். அரசின் நிவாரணத் திட்டத்தின் கீழ் அன்றாட உழைப்பாளர்கள் அனைத்து தரப்பினரையும் பூசகர்கள், நாதஸ்வர கலைஞர்கள், சிகை அலங்கரிப்பாளர்கள் உள்ளிட்டவர்களையும் இணைக்க வேண்டும்.

கொரோனா இடர் முடிவடையும் வரை கடற்றொழிலாளர்களால் பிடிக்கப்படும் மீன், விவசாய உற்பத்திப் பொருட்களை நியாயமான விலையில் அரசு கொள்வனவு செய்ய வேண்டும், வடக்கு கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களில் நடக்கும் விடயங்கள் அந்தந்த மாவட்ட செயலாளர்களால் மக்கள் பிரதிநிதிகளிற்கு அறிவிக்கப்படுவதில்லை. மாவட்ட செயலக கலந்துரையாடல்களிற்கு பிரதேசசபை தவிசாளர்களும் அழைக்கப்படுவதில்லை. இதற்கு முறையான பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டனர்.

அன்றாட தொழிலாளர்களின் நிவாரணம், உற்பத்திகளை கொள்வனவு செய்வது தொடர்பில் அரச அதிபர்கள் மூலம் நடவடிக்கையெடுப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி மன்றங்களின் நிதியை நிவாரணத்திற்கு வழங்க அரசு அனுமதிக்கவில்லை, குறைந்தபட்சம் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் முகமாக, அந்த நிதியிலிருந்து வீட்டுத் தோட்டம், விவசாயத்தை ஊக்குவிக்கும் செயற்பாடுகளிற்கு பிரதேசசபை நிதி செலவிட அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

உள்ளூராட்சிசபை நிதியை விடுவித்து செயற்படுவதை தேர்தல் திணைக்களம் அனுமதிக்கவில்லை, உள்ளூர் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டங்களிற்கு நிதி செலவிட அனுமதிக்கலாமென பிரதமர் தரப்பில் கூறப்பட்டது.

20 வருடங்களிற்கு மேற்பட்ட காலம் சிறையிலுள்ள, பாரதூரமான குற்றமிழைக்காத அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென செல்வம் அடைக்கலநாதன், எம்.எ.சுமந்திரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.

தற்போதைய நிலையில் 71 அரசியல் கைதிகள் உள்ளனர், அவர்கள் மீது வழக்கு உள்ளதாகவும், அவர்களை விடுவிப்பதில் தாமும் அக்கறையாக இருப்பதாகவும் மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

அரசியல் கைதிகளை விடுவிப்பதன் மூலம் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தலாமென சுமந்திரன் குறிப்பிட்டார். அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்திற்கும், அவர்களின் உறவினர்களின் பிரதேசத்திற்குமுள்ள தூரத்தை சார்ள்ஸ் நிர்மலநாதன் சுட்டிக்காட்டி, அவர்களை அண்மைய இடமொன்றில் மாற்ற வேண்டுமென்றார்.

புதிய அரசியலமைப்பு விவகாரம் நகர்த்தப்பட வேண்டுமென கூட்டமைப்பினர் குறிப்பிடப்பட்டபோது, புதிய நாடாளுமன்றத்தில் இரு தரப்பும் அது தொடர்பில் உட்கார்ந்து பேசி, செயற்படுத்தலாம் என ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் குளத்தின் கீழ் உள்ள 300 ஏக்கர், ஜெயபுரத்தில் உள்ள 200 ஏக்கர் விவசாய காணிகளை வனவள திணைக்களம் ஆக்கிரமித்துள்ளதை சிறிதரன் சுட்டிக்காட்டினார்.

ஒரு காலத்தில் விவசாய நிலங்களாக இருந்த பகுதிகள் அவை, சுயசார்பு பொருளாதாரத்தை முன்னெடுக்க வேண்டுமென உங்கள் அரசு கூறுகிறது, ஆனால் காணிகள் விடுவிக்கப்படவில்லையென குறிப்பிட்டார். உடனடியாக, அந்த காணிகளை விடுவிக்க நடவடிக்கையெடுப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

ஆனையிறவு சோதனைச்சாவடியின் கெடுபிடி குறித்து சிறிதரன் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரும்போது, வவுனியா வரையே சோதனைச்சாவடி கெடுபிடி இருப்பதாகவும், தெற்கில் இல்லையென்றும், இராணுவம் போர்க்கால மனநிலையில் தமிழர்களுடன் செயற்படுவதை போல தோன்றுவதாகவும் தெரிவித்தார். இது தொடர்பில் கவனத்திற்கொள்வதாக மகிந்த தெரிவித்தார்.