அரசியல் நோக்கத்திற்கு அப்பால் மக்களின் நன்மை கருதி செயற்படுமாறு இரா.சம்பந்தன் கோரிக்கை

0

உள்ளூராட்சி, நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுபவர்கள் மக்களின் நன்மை கருதி செயற்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசியல் நோக்கத்துடன் செயற்பட்டால் எதனையும் நிறைவேற்ற முடியாமலும், அமுல்படுத்த முடியாமலும், முன்னேற்றத்தை அடைய முடியாமலும் போய்விடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் கடந்த புதன்கிழமை சபையில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட நிலையில், அதற்கு எதிராக கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர்.

எனினும் வரவு செலவுத் திட்டம் மூன்று மேலதிக வாக்குகளால் நிறைவேறியதுடன், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் மேயராகத் தொடர்ந்து பதவி வகிக்கவும் வாய்ப்புக் கிட்டியது.

இவ்வாறான நிலையில், வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எடுத்த முடிவு தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே இரா.சம்பந்தன் இந்த கோரிக்கையை விடுத்தார்.

மேலும் வாக்களிப்பது தொடர்பாக தனக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும் இந்தத் தீர்மானம் யாழ்ப்பாணத்தில் இருந்தவர்களால் எடுக்கப்பட்டது என்றும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.