அரசியல் லாபம் தேடும் எந்தவொரு நோக்கமும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடையாது – அகிலவிராஜ் காரியவசம்

0

கொரோனா அச்சுறுத்தல் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையில், அரசியல் லாபம் தேடும் எந்தவொரு நோக்கமும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடையாது என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கொரோனா வைரஸ் தினமும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் பொருளாதாரம் என்பன முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில்தான் அரசாங்கம் பொதுத் தேர்தலை நடத்த முயற்சி செய்து வருகிறது. நாளுக்கு நாள் மாறுப்பட்ட கருத்துக்கள் வந்துக் கொண்டிருப்பதால், மக்களும் குழம்பிப் போயுள்ளார்கள். ஐக்கிய தேசியக் கட்சி என்ற ரீதியில், பி.சி.ஆர். பரிசோதனையை அதிகரிக்குமாறு தொடர்ச்சியாக கேட்டு வருகிறோம்.

இன்று முப்படையினருக்கும் வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது. யாரேனும் ஒருவருக்கு கொரோனா சந்தேகம் இருந்தால், அதன் அறிகுறிகளை முழுமையாக கண்டறிந்துக் கொள்ள இன்னும் முடியாதுள்ளது.

இதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. எனவே, சந்தேகநபர்களை பரிசோதனை செய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கிறோம்.

இதன் பாரதூரத்தன்மையை உணர்ந்து அரசாங்கம் செயற்பட வேண்டும். நாம் இந்தத் தருணத்தில் எந்தக் காரணம் கொண்டும் அரசியல் லாபம் தேட முற்பட மாட்டோம் என்பதை அரசாங்கம் முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும்.

கொரோனா நிலவரம் தொடர்பான சட்டங்களுக்கு அனுமதியளித்தல், நிதியை பெற்றுக் கொடுக்க வழிவகுத்தல், அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு முற்றாக ஆதரவு வழங்குவதற்காகத் தான் நாடாளுமன்றைக் கூட்டுமாறுக்கூட வலியுறுத்தி வருகிறோம்.

தேவையில்லாத கருத்துக்களை சமூகத்தில் பரப்புவதன் ஊடாக, இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாது. இன்று 5 ஆயிரம் ரூபாய் நிதி வழங்குவதில்கூட அரசியல் புகுத்தப்பட்டுள்ளது. இந்தக் காலத்தில் தேர்தல் தொடர்பாக சிந்தித்தால், நாடே பாரிய சிக்கலுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்படும்.