அரசு தமது சுயலாபத்திற்காக மக்களை பலிக்கடாவாக்குகின்றது – இரா.சாணக்கியன் காட்டம்

0

பொதுஜன பெரமுன அரசானது தங்களுடைய சுயலாப அரசியலுக்காக மக்களை பலிக்கடாவாக்கி கொண்டிருக்கின்றது என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளருமான இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும்,  ”இலங்கையில் நாடாளுமன்றம் மார்ச் மாதம் 02ஆம் திகதி நள்ளிரவுடன் கலைக்கப்பட்டு ஏப்பரல் 25ம் திகதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மார்ச் 19ஆம் திகதியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைவதாகவும் வர்த்தமானி வெளியிடப்பட்டது.

உலகையே விழிபிதுங்க வைத்த கோவிட் 19 வைரஸ் தாக்கம் அதற்கு முன்னரே இலங்கை உட்பட பல நாடுகளுக்கு உக்கிரமடைந்திருந்த காலப்பகுதியாகும்.

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன முன்ணணியின் கூட்டு கலைந்துவிடும் என்னும் காரணத்தினால் தந்திரோபாயமாக வேட்புமனுவை பெற்றுக்கொண்டதன் பின்னர் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியுள்ளனர்.

இதனை முன்னரே அமுல்படுத்தியிருந்தால் இன்னும் கோரோனா வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கலாம். தங்களின் உட்கட்சி பூசலால் கொள்ளை நோய்க்கு மக்களை பலியாக்க முனைப்பு செய்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதது. அதுமட்டுமன்றி கோரோனா வைரஸ் தொற்று பரிசோதனை ஒரு நாளைக்கு 300 பேருக்கு மேற்கொள்ளப்படுகிறது.

அதனை ஆரம்பத்தில் இன்னும் அதிகரித்திருந்தால் மேலும் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கலாம். அந்தவிடயத்தில் அரசு தவறு செய்துவிட்டது.

தற்போது மூன்று நாளைக்குள் இலங்கையின் டொலர் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது, 180ரூபாவில் இருந்து 200ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதுவும் இவ் அரசாங்கத்தின் மக்களை பாதாளத்திற்கு தள்ளும் ஒருவிடயமாகும். இதற்கு கோரோனா வைரஸ் காரணமல்ல. நாடாளுமன்ற தேர்தலை இலக்கு வைத்து வரிகளை குறைத்தமையே காரணமாகும்.

இவ்வாறு பொருளாதார வீழ்ச்சியடைந்து செல்லுமாயின் எதிர்காலத்தில் இலங்கையில் முதலீடுகள் குறைவடைந்து மேலும் மக்களை படுபாதாளத்திற்கு தள்ளி பொருளாதார வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும். இவ் அரசாங்கம் தங்களின் அரசியல் சுயலாபத்திற்காகவும், தேர்தல் சலுகைகளுக்காகவும் பொருளாதாரத்தை பயன்படுத்தி மக்களை வறுமையான நிலைக்கு தள்ளி அதில் அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றனர்.

ஆகவே இவ்வாறான மக்களை இன்னல்களுக்குள் இட்டுச்செல்லும் செயற்பாடுகள் அரசினால் நிறுத்தப்பட வேண்டும்”  என குறித்த அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.