ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அத்தியாவசிய தேவைக்காக வழங்கப்பட்டுள்ள ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம்.
இந்த விடயம் தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. நோய்த் தடுப்பிற்கான ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த சட்டத்தை மதித்து அனைத்து பிரஜைகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
அற்ப விடயங்களுக்காக அநாவசியமாக வீடுகளை விட்டு வௌியேறுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். சுகாதார நிலையுடனான போராட்டம் காரணமாக ஒவ்வொரு பிரஜைகளும் தங்களின் பொறுப்புகளை சரிவர நிறைவேற்ற வேண்டும்.
தொழில் நிமித்தம் வௌிமாவட்டங்களுக்கு சென்று சிக்கலை எதிர்நோக்கியுள்ளவர்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.
எனினும், கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு முன்னெடுக்கப்படும் ஒரு வழி முறையாகவே அவர்களை அனுப்பி வைக்காதுள்ளோம்.
ஆகவே, இந்த விடயம் தொடர்பில் பகிரப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். அனைத்து பிரஜைகளுக்கும் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது“ எனத் தெரிவித்துள்ளார்.