ஆட்சியைக் கவிழ்க்க மாட்டோம் – அரசாங்கத்திற்கு உத்தரவாதம் வழங்கினார் ரணில்!

0

ஆட்சியைக் கவிழ்க்கவோ, அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளவோ மாட்டோம் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் உடனான சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா வைரஸ் தொற்றினால் நாடு பேரழிவை சந்தித்துள்ள நிலையில் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து அவதானம் செலுத்தி அதனை அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில் முன்னெடுக்கக் கூடிய நிலைமையை ஏற்படுத்த முடியும்.

நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் பெறுகின்ற சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இரண்டாம் வாசிப்புக்கும் நாடாளுமன்றத்தை அதேபோன்று நாடாளுமன்றத்தை ஒரு மணித்தியாலத்திற்கு மட்டுப்படுத்த முடியும்.

அதேபோன்று அவசர நிலைமையை கருத்திற் கொண்டு கூட்டப்படுகின்ற நாடாளுமன்ற அமர்வு குறித்து முன்பதாக கட்சி தலைவர்கள் கூட்டத்தை நடத்தி தீர்மானிக்க முடியும்.

அத்துடன் அதே கட்சி தலைவர் கூட்டத்தில் அவசர நிலைமையைத் தவிர ஏனைய விடயங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் அவதானத்திற்கு கொண்டு வராமலிருப்பதற்கும் வாய்ப்புக்கள் உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்ற தீவிரமடைந்து வந்த நிலைமையில் இங்கிலாந்து மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் இதே போன்று நாடாளுமன்றத்தை அவசரமாகக் கூட்டி வைரஸ் தொற்றை எதிர்கொள்ள வேண்டிய புதிய சட்டங்களுக்கு அங்கீகாரம் பெற்றுக் கொண்டது.

எனவே கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்வதற்கு தேவையான சட்டங்களுக்கு அனுமதி பெற்றுக் கொள்வதற்காக நாடாளுமன்றம் கூட்டப்படுமேயானால் அரசாங்கத்தை கவிழ்க்கவோ அல்லது மாற்றுவதற்கோ எவ்விதமான நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுக்கப் போவதில்லை.

முழு உலகிற்குமே அச்சுறுத்தலாகியுள்ள வைரஸ் தொற்றினை சுய அரசியல் அரசியல் தேவைக்காக பயன்படுத்திக கொள்ள வேண்டிய தேவை எமக்கு கிடையாது.

எனவே தான் தற்போது காணப்படுகின்ற வைரஸ் தொற்றினை எதிர்கொள்வதற்காகவும் அதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குமான எதிர்க்கட்சிகளின் கூட்டு திட்டமொன்றை ஜனாதிபதிக்கு ஏற்கவே எழுத்து மூலமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஆகவே அதிகாரத்தை மட்டுப்படுத்தவோ அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளுவதோ ஐக்கிய தேசிய கட்சியின் நோக்கம் அல்ல. நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் கருத்திற் கொண்டும் அதிலிருந்து மீள்வதற்குமான நேர்மையான ஒத்துழைப்பினையே அரசாங்கத்துக்கு வழங்குகின்றோம்“ எனத் தெரிவித்துள்ளார்.