ஆனையிறவில் 3000 இராணுவத்தினரை கொலை செய்தேன்- கருணாவுக்கு எதிராக சி.ஐ.டி விசாரணை

0

ஆனையிறவில் 3000 இராணுவத்தினரை கொலை செய்ததாக,  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா)  தெரிவித்த கருத்து தொடர்பாக சி.ஐ.டி விசாரணையை முன்னெடுக்கவுள்ளது.

கருணா தொடர்பாக உடனடியாக விசாரணையை  ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் இதற்கான உத்தரவை  இன்று (திங்கட்கிழமை) பிறப்பித்துள்ளார்.

வன்னியில் இடம்பெற்ற போரின்போது 2000 தொடக்கம் 3000 வரையிலான இலங்கை படையினரை, ஆனையிறவு பகுதியில் வைத்து ஒரே இரவில் தாம் படுகொலை செய்ததாக கருணா அம்மான், பகிரங்கமாக அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த கருணாவின்  கருத்துக்கு  தென்னிலங்கையை சேர்ந்த அரசியல்வாதிகள் பலர் தொடர்ந்து எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும் தென்னிலங்கை மக்களிடத்திலும் குறித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இவ்விடயம் தொடர்பாக கருணாவுக்கு எதிராக உடனடியாக விசாரணையை முன்னெடுக்குமாறு சி.ஐ.டி.யினருக்கு பொலிஸ்மா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.