ஆற்றுநீரில் கடல்நீர் கலப்பு: மட்டக்களப்பில் விவசாயம் வெகுவாகப் பாதிப்பு!

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட பழுகாமம் வயற்கண்டத்தில் உவர்நீர் புகுந்தமையால் வேளாண்மை கருகி நாசமாகியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஆற்றுநீரில் கடல்நீர் கலப்பதால் அந்நீர் கால்வாயூடாக வயல் காணிகளினுள் உட்புகுந்தமையால் குடலைப்பருவ வேளாண்மை இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்கத்திற்கு உட்பட்ட 250ஏக்கர் வயல் காணிகளும் கடந்த ஐந்து வருடங்களாக உவரினால் பாதிக்கப்பட்டு வருகின்றன.

கால்வாய் மற்றும் வடிச்சல் கால்வாய்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் இந்நிலை ஒவ்வொரு வருடமும் ஏற்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

வடிச்சல் கால்வாய்களின் கல்வெட்டுக்களை உரிய முறையில் திருத்தி உவர்நீர் வயல்காணிக்குள் செல்லாத வகையில் நடவடிக்கையெடுக்க வேண்டும் என நீர்ப்பாசனத் திணைக்களத்திடம் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேநேரம், குறித்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நிதி கிடைக்கும்பட்சத்தில் முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளின் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கையெடுக்கப்படும் என கிழக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பொறியியலாளர் சுபாகரன் தெரிவித்தார்.