ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று(வியாழக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் அரச மருந்தாக்க கூட்டுத்தாபனங்கள் இரண்டினது தலைவர்களுடன் மருந்துப் பொருட்கள் உற்பத்தி, இறக்குமதி மற்றும் விநியோகம் தொடர்பில் கேட்டறிந்தார்.
நாட்டினுள் மருந்து விநியோகம் எப்படி இடம்பெறுகிறது என ஜனாதிபதி வினவியதற்கு பதிலளித்த அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன மூன்று முறைமைகளின் கீழ் மருந்து விநியோகம் இடம்பெறுவதாகவும் அவை அரச துறை உற்பத்தி, தனியார் துறை உற்பத்தி மற்றும் இரு துறைகளினதும் இறக்குமதி ஆகும் என குறிப்பிட்டார்.
நாட்டினுள் சுமார் 750 மருந்து வகைகள் பயன்படுத்தப்படுவதாகவும், இறக்குமதியின் போது கொள்வனவு நடைமுறைகளுக்கு சில மாதங்கள் செல்வதால் சிலபோது தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்தார்.
மருந்து விநியோகத்தின் போது எவ்வித தட்டுப்பாட்டுக்கும் இடம்வைக்க வேண்டாம் என பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, கடந்த வருட கேள்வி மாதிரியை ஆராய்ந்து அதற்கடுத்த வருடத்தின் மருந்துத் தேவையை தீர்மானிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இடைத்தரகர்கள் பலர் இலாபமடைவதற்கு இடமளிக்காது மக்களை கருத்திற்கொண்டு மருந்து உற்பத்தியும் விநியோகமும் முறைப்படுத்தப்பட வேண்டும்.
மருந்து இறக்குமதி மற்றும் விநியோகத்திற்காக எளிமையான முறைமையொன்றை தயாரிப்பது முக்கிய தேவையாகும். அனைத்து மருந்துகளும் உயர் நியமங்களுடன் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, தரம் குறைந்த மருந்து உற்பத்திக்கு அல்லது இறக்குமதிக்கு இடமளிக்க வேண்டாம் என்றும் பணிப்புரை விடுத்தார்.
பற்றாக்குரை ஏற்படுவதை தடுப்பதற்காக பாதுகாப்பாக கையிருப்பை பேணவேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மருந்துகள் காலாவதியாகும் திகதியை கணக்கிட்டு கொள்வனவு அனுப்பாணை விடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
வைத்தியசாலைகளுக்கு தேவையான 80 மருந்து வகைகளை தனது நிறுவனம் உற்பத்தி செய்வதாக குறிப்பிட்ட அரச மருந்துப்பொருட்கள் உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் உத்பல இந்திரவங்ச சேலைன் உட்பட மேலும் பல மருத்துகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதன் மூலம் வருடமொன்றுக்கு சுமார் 130கோடி ரூபாவை மீதப்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் சமூர்த்தி இயக்கத்திடம் உள்ள நிதியை மருந்து உற்பத்தி தொழிற்துறையில் முதலிடுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் இக்கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டது. அவ்வாறானதொரு முறைமை தயாரிக்கப்பட்டால் இவ்விரு நிதியத்திற்கும் நிரந்தர வருமானமொன்று திறக்கப்படும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.