இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக நாடு திரும்பியோர் கைது – தனிமைப்படுத்த உத்தரவு!

0

இந்திய முகாங்களில் தங்கிருந்து சட்டவிரோதமான முறையில், படகுமூலம் யாழ்ப்பாணம் திரும்பிய இருவர் உட்பட நான்கு பேர் காங்கேசன்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நான்கு பேரையும் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைப்பதற்கான அனுமதி மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று (சனிக்கிழமை) காலை காங்கேசன்துறை கடற்பரப்பில், கடற்படையினர் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போதே காங்கேசன்துறை கடற்பரப்பில் பயணித்த படகு ஒன்று சோதனையிடப்பட்டது.

அப்போது படகில், படகு ஓட்டியுடன் நால்வர் பயணித்தனர். அவர்களில் இருவர் இந்திய முகாம்களிலிருந்து சட்டத்துக்கு புறம்பாக நாடு திரும்பியவர்கள் என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்தது.

இந்நிலையில் குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை பொலிஸார் மூலம் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

அத்துடன் நான்கு பேரிடமும் பீ.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்படவேண்டிய நிலையில், தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைத்திருக்க நீதிமன்ற அனுமதி பெறப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.