இந்து மக்களுக்கு பொலிஸாரின் வேண்டுகோள்!

0

“தீபாவளி பண்டிகையை வீட்டிலேயே சுகாதாரப் பாதுகாப்புடன் கொண்டாடுங்கள்” என்று இலங்கைவாழ் இந்து மக்களிடம் இலங்கை பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் விசேட அறிவிப்பொன்றை விடுத்த பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன, இவ்வாறு கூறியுள்ளார்,

“எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவு வரை மேல்மாகாணத்தில் இருந்து வெளியிடங்களுக்குச் செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சோதனை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, எவராவது வெளியேற முற்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புப் பிரிவினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே, தனிமைப்படுத்தல் கால எல்லை முடிவடையும் வரை நடைமுறைகள் உரிய வகையில் பின்பற்றப்பட வேண்டும்.

அதேவேளை, மேல் மாகாணத்திலும் அதற்கு வெளியில் உள்ள தமிழ் மக்களிடமும், தீபாவளியை உங்கள் வீட்டுக்குள்ளேயே சுகாதாரப் பாதுகாப்புடன் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கின்றோம். சமூகமாக இணைந்து கொண்டாடுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்” – என்றார்.