இன்று சமர்ப்பிக்கப்படுகின்றது இலங்கை தொடர்பான ஐ.நா உயர் ஸ்தானிகரின் அறிக்கை!

0

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரின் அறிக்கை இன்று(புதன்கிழமை) சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46ஆவது அமர்வு ஜெனீவாவில் இலங்கை நேரப்படி நேற்று முன்தினம் ஆரம்பமானது.

இதற்கமைய, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 ஆவது அமர்வின் மூன்றாம் நாள் அமர்வுகள் இன்று இடம்பெறவுள்ளன.

இதன்போது, இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரின் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை ஆகியவற்றை ஊக்குவித்தல் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரின் அறிக்கை இந்த அமர்வின் 20ஆவது விடயமாக இணைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 30/1 தீர்மானத்தில், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அதன் பரிந்துரைகள், தொடர்புடைய ஏனைய செயன்முறைகளை செயற்படுத்துவது குறித்த முன்னேற்றத்தை தொடர்ந்து மதிப்பிடுமாறு, மனித உரிமை பேரவையினால், மனித உரிமை ஆணையாளரிடம் கோரப்பட்டிருந்தது.

அத்துடன், 40/1 தீர்மானத்தில், 30/1 தீர்மானத்தை அமுல்படுத்துவது குறித்த கலந்துரையாடலைத் தொடர்ந்து, அது குறித்த விரிவான அறிக்கையை, 46 ஆவது அமர்வில் சமர்ப்பிக்குமாறும் கோரப்பட்டிருந்தது.

இதற்கமைய, குறித்த அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், அது தொடர்பான கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை, ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில், இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான தீர்மானம் பல்வேறு நாடுகள் இணைந்த கூட்டுக் குழுவினால் முன்வைக்கப்படவுள்ளது.

பிரித்தானியா, ஜேர்மனி, கனடா, Montenegro, மலாவி மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து கூட்டாக இந்த தீர்மானத்தை முன்வைக்கவுள்ளன.

கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை கட்டாய தகனம் செய்வதை இடைநிறுத்தல், மனித உரிமை மீறல்கள் குறித்த பொறுப்புக் கூறல், ஜனநாயக ஆட்சியை வலியுறுத்துதல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துதல் மற்றும் 13 ஆவது திருத்தத்தை உறுதி செய்தல் ஆகிய விடயங்கள் இந்த தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.