இன்று முதல் வெளிநாட்டு விமானங்கள் இலங்கையில் தரையிறங்க தடை!

0

கொரோனா என்னும் கொவிட் 19 வைரஸ் நாட்டுக்குள் பரவுவதை தடுப்பதற்காக இலங்கைக்கு விமானங்கள் வருவதை இரண்டு வாரங்களுக்கு நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த தீர்மானம் இன்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கொரோனா தடுப்பு செயலணியுடன் நேற்று காலை   ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதற்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களை தரையிறக்குவது இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எனினும், இலங்கையிலிருந்து வெளியேறுதல், விமானப் பயண இடைமாறல் மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்லும் விமான சேவை என்பன தொடர்ச்சியாக இடம்பெறும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, பிரச்சினையை வெற்றிகொள்வதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டியிருந்தாலும் நாட்டை செயலிழக்கச்செய்ய முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடலை ஆரம்பித்து கொரோனா அச்சுறுத்தலை வெற்றிகொள்வதற்காக அரசு எடுத்த நடவடிக்கைகளை ஒன்றன்பின் ஒன்றாக தெளிவுபடுத்திய ஜனாதிபதி, நோய் தடுப்பு செயலணி ஜனவரி 26 ஸ்தாபிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

யாத்திரைக்காக இந்தியாவுக்கு சென்றுள்ள இலங்கையர்கள் கிட்டத்தட்ட 300 பேர் பல இடங்களில் தங்கியிருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அவர்களை ஒரு இடத்தில் ஒன்றுசேர்த்து மீண்டும் அழைத்து வருவதற்காக விமானம் ஒன்றை அனுப்பிவைக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வெளிநாட்டில் இருந்து வருகை தந்து நோய் கண்காணிப்பு செயற்பாட்டுக்கு உட்படுத்தப்படாது மறைந்து இருப்பவர்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறும் அவர்கள் பற்றி மக்களை தெளிவுபடுத்துமாறும் ஜனாதிபதி பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கினார்.

ஏற்பட்டுள்ள பிரச்சினையை குறுகிய அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்த தேவையில்லை. நாாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு அவசியமில்லை. பொதுத்தேர்தலை பிற்போடத்தேவை எனின் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதற்கான அதிகாரம் உள்ளது” என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

ஒன்றுகூடல், பல்வேறு விழாக்கள் மற்றும் மக்கள் ஒன்றுசேர்தல் போன்றவற்றை இயலுமான அளவு குறைத்துக்கொள்வதன் முக்கியத்துவம் தொடர்பாகவும்  கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டது.