இன, மத, கட்சி பேதம் இன்றி அனைவரும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக செயற்பட வேண்டும் – பிரதமர்!

0

அனைத்து மக்களும் இன, மத, கட்சி பேதம் இன்றி சுகாதார அமைச்சு விடுக்கும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக செயற்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்றது.

இதன் போதே பிரதமர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில், சுகாதார துறைசார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகளை பின்பற்றி செயற்பட்டு வருவதாகவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டமானது. சுகாதார துறைசார்ந்தவர்களின் ஆலோசனைகள் மூலம் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சுகாதார அச்சுறுத்தல் நிலையில், சுகாதார துறையினர் விடுக்கும் அறிவிப்புகள் குறித்து அதிக அவதானம் செலுத்துமாறும் பிரதமர்  பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டு மக்களின் உயிர்களை பாதுகாப்பதற்காக அனைவரும் போராடிவரும் நிலையில், மத ரீதியான சில முன்னெடுப்புகளை தவிர்ந்து, அனைவரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், குறித்த கலந்துரையாடலின்போது, அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டிருந்த நிலையில், அவர்களுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் போதிய தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.

நாட்டில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டது முதல் இதுவரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகள் குறித்தும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனைவருக்கும் எடுத்து கூறியுள்ளார்.

மேலும், கொரோனா தொற்று ஏற்ப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்ப்பட்டுவருவதோடு, அதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்கள் குறித்து இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா அனைவருக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

இதேவேளை, நாட்டில் தற்போது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதனால் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள  வேலைத்திட்டங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட செயற்குழுவின் தலைவர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ இது தொடர்பான விடயங்களை கலந்துரையாடலின் போது தெளிவுப்படுத்தியுள்ளார்.