இராஜாங்கனையைச் சேர்ந்த 395 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை

0

 PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 395 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கூறியுள்ளார்.

அத்துடன், ராகமை தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில், அவர்களுக்கும் COVID – 19 தொற்று ஏற்படவில்லை என்பது கண்டறியப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,குண்டசாலையில் 101 பேர், கொட்டுகொட பகுதியில் 74 பேர், தந்திரிமலை – ரந்தம்பே பகுதியில் 266 பேர், பொலன்னறுவை வைத்தியசாலைக்கு வருகை தந்த 200 பேர், இராஜாங்கனையில் 150 பேர் உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் PCR பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், முகக்கவசங்களை அணிவதன் ஊடாக கொரோனா நோயாளர்களிடமிருந்து வைரஸ் சூழலில் பரவுவதை குறைத்துக்கொள்ள முடியும் என இலங்கை சுவாச நோய் தொடர்பான வைத்திய நிபுணர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.