இராணுவ மேஜராக நடித்து 17 மணமகள்களை ஏமாற்றி 6.6 கோடி ரூபா மோசடி

0

தன்னை இராணுவ மேஜர் எனக் கூறிக்கொண்டு, 17 பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி சுமார் 6.6 கோடி இந்திய ரூபாவை (சுமார் 16.5 கோடி இலங்கை ரூபா) மோசடி செய்த குற்றச்சாட்டில் நபர் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி நபர் ஐதராபாத் நகரில் வாடகைக்குப் பெற்ற அறையொன்றை தனது அலுவலகமாக காட்டிக்கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நபர் இந்திய இராணுவ அதிகாரி போன்று சீருடை அணிந்துகொண்டு, வீடியோ கோல் மூலம் மணமகன் தேடும் குடும்பங்களுடன் தொடர்புகொள்வாராம்.

தனது இராணுவ அலுவலகத்திலிருந்து பேசுவதாக அந்நபர் கூறுவதை கேட்டு, சம்பந்தப்பட்ட குடும்பங்களோ, மணமகள்களோ அவரை சந்தேகிக்கவில்லையாம்.

கடந்த 6 வருடங்களில் 17 பெண்களிடம் இவர் மோசடி செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் மற்றொரு பெண்ணை ஏமாற்ற முயன்றபோது, அப்பெண் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார். அதையடுத்து கடந்த சனிக்கிழமை அவர் கைது செய்யப்பட்டார்.

ஸ்ரீனிவாஸ் சவுகான் எனும் பெயரில் இயங்கிய நபரே கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் உண்மையான பெயர் முதவத் ஸ்ரீனு நாய்க் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மோசடியாகப் பெறப்பட்ட பணத்லிருந:து மேர்சிடிஸ் பென்ஸ் கார் உட்பட 3 கார்கள், வீடு முதலானவற்றை அவர் வாங்கியிருந்தமை பொலிஸ் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.