இராவணன் குறித்த வரலாற்று நூல்கள் மற்றும் ஆவணங்கள் இருப்பின் மக்கள் அவற்றைத் தந்து உதவுமாறு சுற்றுலாத்துறை மற்றும் விமானசேவைகள் அமைச்சின் கீழான இலங்கை விமான சேவைகள் அதிகாரசபை அறிவித்துள்ளது.
இராவணன் மற்றும் ஆகாயமார்க்கமான புராதன வரலாறுகள் இழக்கப்பட்டமைக்கான தொல்பொருள் உரிமைகள் குறித்து ஆய்வுகளை ஆரம்பிப்பதற்காகவே இலங்கை விமானசேவைகள் அதிகாரசபை இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.
இந்த விடயம் குறித்து விமானசேவைகள் அதிகாரசபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலில், “விமானசேவைகள் அதிகாரசபையின் சுற்றாடல், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவினால் இராவண அரசன் மற்றும் ஆகாயமார்க்கமாக நாம் இழந்த புராதன தொல்பொருள் உரிமைகள் என்ற விடயம் தொடர்பான ஆராய்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
அதன் முதற்கட்டமாக இராவண அரசன் குறித்த வரலாறு மற்றும் தரவுகள் குறித்த புத்தகங்களைச் சேகரிப்பதற்கு அதிகாரசபை தீர்மானித்திருக்கிறது. எனவே இராவணன் குறித்த வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய ஆவணங்களை எமக்குத் தந்துதவுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.
அவ்வாறு வரலாற்று ஆவணங்களைத் தந்துதவ விரும்பும் பட்சத்தில் இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்பாக 076 6317110 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலமாகவோ அதுகுறித்துத் தகவல் தரப்பட வேண்டும். இவ்வாறு எம்மிடம் தரப்படும் வரலாற்று நூல்கள் மற்றும் ஆவணங்களுக்காகப் பொருத்தமான தொகை கொடுப்பனவாக வழங்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.