இறந்த உறவுகளை நினைவுகூரமுடியாத சூழ்நிலையினை நாட்டில் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என்பதை இன்றைய இளைஞர்கள் உணரவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நான் பிறப்பதற்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் கொக்கட்டிச்சோலை படுகொலை நடைபெற்றுள்ளது. இன்றைய இளைஞர்கள் கடந்த கால வரலாறுகளை உணரவேண்டும்.
இவ்வாறான படுகொலைகள் நடைபெற்றதற்கான நாட்டின் சூழ்நிலையினை உணரவேண்டும்.
இந்த நிகழ்வினை நடாத்துவதற்கு பல தடைகள் ஏற்படுத்தப்பட்டன. எமது உரிமைகளை இழக்கச்செய்யும் வகையில் நாங்கள் போலியான அபிவிருத்தியை நம்பிசென்றுள்ள இளைஞர்கள் இன்றைய நிலைமையினை உணர்ந்துகொள்ளவேண்டும்.
கடந்த காலத்தில் இறந்த உறவுகளை நினைவுகூருவதற்கு சந்தர்ப்பம் இருந்தாலும் இன்றைய காலத்தில் அந்த நிலைமை இல்லாதநிலையே உள்ளது.இந்திய இராணுவத்தினால் கொல்லப்பட்ட எனது பெரியப்பாவினை நினைவுகூருவதற்கு நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவு பெறப்பட்டு அதனை செய்ய அனுமதிக்கவில்லை.
இன்றைய தினமும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் நாங்கள் இந்த இடத்திற்குள் செல்லமுடியாது என கூறியிருந்தார்.நாங்கள் இறந்த உறவுகளை நினைவுகூரமுடியாத சூழ்நிலையினை நாட்டில் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என்பதை இன்றைய இளைஞர்கள் உணரவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.