இறுதி தருணத்தில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் இலங்கை பேச்சுவார்த்தை

0

ஜெனீவாவில் நடைபெறவுள்ள  ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னதாக  மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் கடைசி நிமிட பேச்சுவார்த்தையில் இலங்கை ஈடுபட்டுள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை தொடர்பாக மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் மைக்கேல் பேச்லெட், வெளியிட்டுள்ள மோசமான அறிக்கை குறித்தும் கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள்,  இலங்கையிலுள்ள தனியார் ஊடகமான டெய்லி மிரருக்கு தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக இலங்கை வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது, “நாங்கள் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் சில விவாதங்களை நடத்தி வருகிறோம்.  மேலும் அவர் எழுப்பிய விடயங்களில் ஒருவித உடன்பாட்டை எட்ட முயற்சிக்கிறோம்.

அந்தவகையில் இவ்விடயங்களில் முறையான பதிலை நாங்கள் நிச்சயம்  வெளியிடுவோம்” என தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 27 ஆம் திகதி  மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் மைக்கேல் பேச்லெட் வெளியிட்ட அறிக்கையில்,   “இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைமையால், நான் அச்சமடைந்துள்ளேன்.

ஆகவேதான் எதிர்காலத்தில் இவ்வாறான மனித உரிமை மீறல்களை தடுக்க  மனித உரிமைகள் பேரவை எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை வகுத்துள்ளேன்.

மேலும் உலகளாவிய அதிகார வரம்பின் கொள்கையின் கீழ் தேசிய நீதிமன்றங்களில் இலங்கை குற்றவாளிகள் எனக் கூறப்படுபவர்களின் வழக்குகளைத் தொடர்வதன் ஊடாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பயணத் தடைகள் மற்றும் சொத்து முடக்கம் உள்ளிட்ட இலக்கு தடைகளை விதிப்பதன் ஊடாகவும் நடவடிக்கை எடுக்க ஐ.நா. உறுப்பு நாடுகள் முன்வரவேண்டும்

இதேவேளை பொறுப்புக்கூறல் உட்பட இலங்கையின் நிலைமையை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடலை மேம்படுத்தவும் எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கான ஆதாரங்களை சேகரித்துப் பாதுகாக்கவும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்காக வாதாடவும் அர்ப்பணிப்புத் திறனை ஆதரிக்கவும் மனித உரிமை பேரவை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என அவர் வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.