இலங்கைக்காக இந்தியாவிடமிருந்து கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெறும் தீவிர முயற்சியில் யுனிசெப் நிறுவனம்!

0

இந்தியாவிடமிருந்து கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெறுவதற்கு ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) இந்தியாவுடன் தீவிர  பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான துணை பிரதிநிதி எம்மா ப்ரிகாம், கோவாக்ஸ் வசதி மற்றும் யுனிசெஃப் ஆகியவற்றின் பங்காளிகள் இந்த விவகாரத்தில் மிக தீவிரமாக செயற்படுகின்றனர் எனத் தெரிவித்தார்.

இலங்கைக்கான அடுத்தக்கட்ட தடுப்பூசிகளைப் பெறுவதற்கு முடிந்தவரை விரைவுபடுத்தும் முயற்சியாக, இந்திய அரசாங்கத்துடனும் சீரம் இன்ஸ்ட்டியூட் ஓப் இந்தியாவுடனும் இணைந்து செயற்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இந்திய அரசாங்கத்தின் அறிவுறுத்தலின் பேரில் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதை சீரம் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

சீரம் நிறுவனம் மூலம் பெறப்பட்ட கோவாக்ஸ் வசதியிலிருந்து முதல் தொகுதி கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் மார்ச் 7ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.