இலங்கைக்கு திரும்புவதற்காக எவருக்கும் பணம் செலுத்த வேண்டாம்

0

லெபனானில் உள்ள இலங்கை தொழிலாளர்களை தாய் நாட்டிற்கு அனுப்புவதற்காக சிலர் பண மோசடியில் ஈடுபடுவதாக புகார்கள் கிடைத்துள்ளதாக லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. 

இவ்வாறு தூதரகம் அரசாங்கத்தின் ஒப்புதலுடன் பணம் சேகரிக்கப்படுகின்றதா, என்பது தொடர்பில் இந்த பண மோசடியில் சிக்கிய இலங்கை பணியாளர்கள் பலமுறை தூதரகத்திடம் விசாரித்துள்ளனர். 

இதுதொடர்பாக, லெபனானில் உள்ள இலங்கை தொழிலாளர்களை தாய் நாட்டிற்கு அனுப்புவதற்கான நிதி திரட்ட எந்தவொரு தனிநபருக்கும் அல்லது அமைப்பிற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 

இதனால் இதுபோன்ற மோசடிகாரர்களுக்கு பணம் கொடுப்பதைத் தவிர்க்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவுறுத்தியுள்ளது. 

இதற்கிடையில், லெபனானில் இருந்து இலங்கைக்கு வரும் விமானங்களுக்கு தரையிறங்குவதற்கு அனுமதி தேவை என்று இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபையினால் விமான நிறுவனங்களுக்கு அறிவித்திருந்தாலும், சில விமான பயணச்சீட்டு முகவர்களினால் விமான பயணச்சீட்டுக்கள் விற்பனை செய்வதாக தூதரகம் அறிவித்துள்ளது. 

பெய்ரூட் விமான நிலையத்தில் பயணிகள் வரையறுக்கப்பட்டிருப்பதுடன், போர்டிங் பாஸ் (Boarding pass) வழங்கப்படவில்லை. இதன்காரணமாக இலங்கை சிவில் சேவை அனுமதியுடன் விமானம் தரையிறங்குவதற்கு அனுமதி தேவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.