இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா- குருமன்காடு ஹோட்டல் பிறின்ஸஸ் ரோஸ் விடுதியில், கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நியமனம், நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் எதிர்காலத்தில் கட்சியை வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கிச் செல்வதற்கான வழிவகைகள், நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு தொடர்பில் ஆராய்வதற்கான சுயாதீனக் குழுவைவொன்றை நியமிப்பது தொடர்பான தீர்மானம், தேர்தல் காலத்தில் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் செயற்பாடுகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேசியப்பட்டியல் நியமனத்தில் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கட்சியின் தலைவருக்கு அறிவிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்தமை தொடர்பாக அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை இந்தக் கூட்டத்தில் முன்வைக்கப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.