இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் ஐந்து பேர் மட்டும்தானா கலந்துகொள்வார்கள் – யோகேஸ்வரன் கேள்வி

0

இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் ஐந்து பேர் மட்டும்தானா கலந்துகொள்வார்கள் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், பொலிஸாரிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்துகொள்வதற்காக நேற்று சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், பா.அரியநேத்திரன் உட்பட பலரை வழிமறித்த பொலிஸார் அவர்களுக்கு நீதிமன்ற தடையுத்தரவினை வழங்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டனர்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் பொலிஸாரிடம் வாதிட்டனர்.

ஐந்து பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக இதன்போது பொலிஸார் தெரிவித்தபோது,  சுதந்திர தின நிகழ்வில் ஐந்து பேர் மட்டுமா அனுமதிக்கப்படுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கேள்வியெழுப்பினார்.

இதேவேளை, திரையரங்குகள் திறக்கப்பட்டு படத்தினை பார்வையிடுவதற்கு பெருமளவானோர் அனுமதிக்கப்படும்போது இவ்வாறான நிகழ்வுகளுக்கு ஏன் தடைவிதிக்கின்றீர்கள் என அங்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் கேள்வியெழுப்பினார்.

இதன்போது பொலிஸாருடன் இடம்பெற்ற வாக்குவாதத்தினை தொடர்ந்து அவர்கள் செல்வதற்கு பொலிஸார் எச்சரிக்கையுடன் அனுமதி வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.