நாட்டின் பொருளாதார சுகாதார மற்றும் அத்தியாவசிய வேலைத்திட்டங்கள் தவிர்ந்து ஏனைய சகல செயற்பாடுகளையும் மே மாதம் முதலாம் திகதியிலிரந்து மூன்று வார காலத்திற்கு முடக்க கோவிட் செயலணிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மே முதலாம் திகதியிலிருந்து கூட்டங்களோ, நிகழ்வுகளோ ஏனைய மக்கள் ஒன்று கூடும் எந்தவொரு செயற்பாடுகளையும் நடத்த முடியாது எனவும், மக்களின் அநாவசிய செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் இம்மாதம் 30ஆம் திகதி வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தற்போது நாட்டில் பரவி வருகின்ற உருமாறிய கோவிட் வைரஸ் பரவல் காரணமாக தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் நாட்டை இரண்டு வார காலமேனும் முடக்க வேண்டும் எனவும், அது முடியாத பட்சத்தில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தை முழுமையாக நிறுத்தவும் சுற்றுலா செயற்பாடுகளை முழுமையாக கட்டுப்படுத்தவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோவிட் – 19 விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே மற்றும் சிறப்பு வைத்தியசர்கள் குழாம் உள்ளிட்ட நிபுணர்கள் ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் புத்தாண்டிற்கு பின்னரான காலப்பகுதியானது தொடர்ச்சியாக கோவிட் தொற்று தொடர்பான எச்சரிக்கை நிலமையுடன் நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.