இலங்கையில் கஞ்சா ஏற்றுமதியை விரைவில் சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை!

0

இலங்கையில் கஞ்சா ஏற்றுமதியை விரைவில் சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே சுதேச மருத்துவத்துறை இராஜாங்க அமைச்சர், சட்டத்தரணி சிசிர ஜயக்கொடி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் மாதத்திற்குள் கஞ்சா ஏற்றுமதிக்கு அனுமதி வழங்குவதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவத் தேவையை அடிப்படையாகக் கொண்டு கஞ்சா ஏற்றுமதியை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டப்பூர்வமாக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே அரசாங்கத்திடம் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார்.

கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டப்பூர்வமாக்குவது அந்நிய செலாவணி நெருக்கடிக்கு தீர்வுகளை கொண்டு வருவதோடு பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் எனவும் அவர் அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.