இலங்கையில் கோவிட் தொற்று காரணமாக புகைப்பிடித்தலை நிறுத்தியுள்ள 48 சதவீதமானவர்கள்

0

இலங்கையில் கோவிட் வைரஸ் தொற்றுப் பரவலுடன் புகைப்பிடிப்பவர்களில் 48 சதவீதமானவர்கள் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தியுள்ளனர் என்று மதுபானங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான தகவல் மையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு புகைப் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தியுள்ளவர்களில் சுமார் 50 சதவீதமானவர்கள் மீண்டும் ஒருபோதும் புகைப்பிடிக்க மாட்டார்கள் என்றும் மதுபானங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான தகவல் மையம் குறிப்பிட்டுள்ளது.

புகைப் பிடிப்பவர்களிடையே கோவிட் தொற்று நேரடியாக தாக்கம் செலுத்துவதுடன், அவர்களின் ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது என்றும் மதுபானங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான தகவல் மையத்தின் பணிப்பாளர் சம்பத் த சரம் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் புகைப்பிடிப்பதால் தினமும் கிட்டத்தட்ட 40 பேர் உயிரிழக்கின்றார்கள் என்ற அதிர்ச்சியான தகவலையும் அவர் கூறியுள்ளார்.

ஒருவர் புகைப்பிடிப்பதை நிறுத்தி விடுவது அவரின் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பு என்றும் சம்பத் த சரம் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் குறைப்பதில் முன்னணி நாடுகளில் ஒன்றாக இலங்கை செயற்பட்டு வருகின்றது. எனினும், புகைப்பிடிக்கும் பழக்கத்தை நாட்டிலிருந்து முற்றாக நீக்க மேலும் பல கொள்கைகளைச் செயற்படுத்த வேண்டியுள்ளது.

புள்ளி விபரங்களின்படி கடந்த 10 ஆண்டுகளில் புகைப் பிடித்தல் 40 – 50 சதவீதம் குறைந்துள்ளதுடன், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு கிட்டத்தட்ட 12 சதவீதம் குறைந்துள்ளது.

இதனை மேலும் குறைப்பதற்கு சிகரெட்களை தனியாக விற்பனை செய்வதைத் தடுப்பது, மேலும், கல்வி நிறுவனங்களுக்கு 100 மீற்றர் சுற்று வட்டாரத்தில் சிகரெட் விற்பனையைத் தடை செய்வது போன்ற திட்டங்களைச் செயற்படுத்த வேண்டும்.

இலங்கையில் கோவிட் தொற்று அடையாளம் காணப்பட்டது முதல் பல தடவைகள் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக மக்கள் அதிகமான காலம் வீட்டில் இருக்க வேண்டி ஏற்பட்டது.

அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் பலர் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இந்த நிலையில், இவ்வாறு தேவையற்ற செலவுகள் மற்றும் உடல் நலத்தைக் கெடுக்கும் பழக்கத்திலிருந்து விடுபட்டு நாடு முன்னேற்றம் கண்டுள்ளமை கோவிட் தொற்றுப் பரவலுக்கு மத்தியில் நாட்டில் ஏற்பட்டுள்ள சிறந்த மாற்றமே ஆகும் என்றார்.